ஜோவின் ரசிகர்கள் என்னை திட்டாத நாளில்லை - சூர்யா

Bookmark and Share

ஜோவின் ரசிகர்கள் என்னை திட்டாத நாளில்லை - சூர்யா

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் சூர்யாவும், ஜோதிகாவும். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போது, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா.

இந்நிலையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற, மஞ்சு வாரியர் நடித்த, 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படம் தமிழில், '36 வயதினிலே' என்ற பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது. ஜோதிகா எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகியுள்ளார்.

சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட பேசினர்.

விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளராகவும், ஜோவின் கணவராகவும் சூர்யா பேசியதாவது...

நான் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. வஸந்த் தான் எனது சினிமா பயணத்தை துவக்கி வைத்தார். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பது போல இன்னும் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன், நான் தயாரிப்பாளராவேன் என்று சொன்னேன்.

அதன்படி 2டி என்ற நிறுவனம் உருவானது. இந்த நிறுவனம் உருவாக எனது பிள்ளைகள் தியா, தேவ் ஒரு காரணம் என்று சொல்லலாம். சந்திரமுகி, மொழி போன்ற படங்களில் நடித்தபோது கூட ஜோதிகா மேடை ஏறியதில்லை.  ஆனால் இப்போது 36 வயதினிலே படம் மூலம் திரும்ப வந்துள்ளார், இப்போது மேடையும் ஏறியுள்ளார்.

இத்தனை ஆண்டு காலம் ஒரு நல்ல அம்மாவாக, மனைவியாக ஜோதிகா இருந்தார். மேலும் தனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மூடி மறைத்து வைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதை அவர் வெளிப்படையாக என்னிடம் சொன்னது இல்லை. ஆனால் அவரது கண்களின் மூலம் இதை தெரிந்து கொண்டேன்.

இந்த எட்டு வருடத்தில் ஜோவின் ரசிகர்கள் என்னை திட்டாத நாளில்லை, ஆனால் இப்போது ஜோ மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருப்பதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். திரும்பவும் ஜோதிகா திரையில் வர இருக்கிறார். ஜோதிகா மீண்டும் திரையில் வந்தது சந்தோஷமாக இருக்கிறது.

ஒவ்வொரு பெண்களும் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும். எதிர்காலத்தில் 2டி நிறுவனத்தின் சார்பில் 10 பெண்களின் கனவுகளை நிறைவேற்ற இருக்கிறோம். ஜோதிகாவின் ரீ-என்ட்ரி ஒரு நல்ல படமாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவருக்கு இப்படியொரு படம் அமைந்தது மிகவும் சந்தோஷம்.

தற்போது 2டி நிறுவனம் சார்பில் நான்கு படங்களை தயாரித்து வருகிறோம். எதிர்காலத்தில் இன்னும் நல்ல நல்ல படங்களை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. இவ்வாறு சூர்யா கூறினார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions