ஏப்ரல் 2 ரிலீஸ்... ஏன் இவ்வளவு போட்டி...?

Bookmark and Share

ஏப்ரல் 2 ரிலீஸ்... ஏன் இவ்வளவு போட்டி...?

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ஒரு படத்தை வெளியிட்டு அந்தப் படத்தை ஒரு சில வாரங்கள் ஓட வைப்பது என்பதுதான் படத்தைத் தயாரிப்பவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

ஒரு பக்கம் எதிர் தரப்பு ரசிகர்கள், இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களின் கேலி, கிண்டல்கள், மற்றொரு பக்கம், படம் பார்க்க ஆரம்பித்த உடனே வரிக்கு வரி விமர்சனம், படம் வெளிவந்த அன்று இரவு திருட்டு விசிடி என பல கவலைகள் அவர்களை மிரள வைக்கிறது.

கோடை விடுமுறை ஆரம்பமாகும் நிலையில் அடுத்தடுத்து பல பெரிய படங்கள் வெளிவர இருப்பதால், கிடைக்கும் 'கேப்' பில் தங்களது படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என அனைவரும் துடித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இங்கு, இப்போது, போட்டி என்பது இல்லாமல் பொறாமை அதிகமாகி வருவது கவலைக்குரிய விஷயமாகவே படுகிறது. எம்ஜிஆர் படமும் சிவாஜி படமும், ரஜினி படமும் கமல் படமும் ஒரே சமயத்தில் வெளிவந்து அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற காலம் போன்று இப்போது வராது என்றே தோன்றுகிறது.

ஒரு படத்தின் அதிகபட்ச வசூல் மூன்று நான்கு நாட்களில் முடிந்து விடுவதே இதற்குக் காரணம். வரும் ஏப்ரல் 2ம் தேதி “கொம்பன், நண்பேன்டா, சகாப்தம்” ஆகிய மூன்று படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் ஒரு படம் வரவில்லையென்றால் கூட மற்றொரு படம் இன்னும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

சுமார் 1000 திரையரங்குகளில் சராசரியாக மூன்று படங்களுமே 300 திரையரங்குகளில் வெளியானால் கிடைக்கும் வசூல் தொகையை விட, ஒரு படம் வராமல் மற்றொரு படம் அதிக தியேட்டரில் வெளியானால் வசூலாகும் தொகை கூடுதலாக இருக்கும்.

மேலும், ஏப்ரல் 2ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் இந்த நான்கு நாட்களில் வசூல் நன்றாக இருக்கும் என்பதே இந்தப் போட்டிக்குக் காரணம்.

பொங்கலுக்கு வெளிவந்த 'ஐ' படம் நான்கு நாள் விடுமுறையில் வெளிவந்ததால்தான் தப்பித்தது கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 'எந்த கொம்பனை எந்த நண்பன் முறியடித்து சகாப்தம்' படைக்கப் போகிறார்கள் என்பது ஏப்ரல் 2ம் தேதி தெரிந்து விடும்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions