துபாயின் முக்கிய இடங்களில் படமாக்கப்படும் `அரபு தாக்கு'

Bookmark and Share

துபாயின் முக்கிய இடங்களில் படமாக்கப்படும் `அரபு தாக்கு'

துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் `அரபு தாக்கு'. இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் கஷ்டத்தையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லவிருக்கும் படம். அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.

இயக்குநர் பரதன் இயக்கிய `அதிதி' என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற தமிழ் தெரியாத அரபு நடிகை கதையின் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் தம்பி ராமைய்யா வித்தியாசமான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் ரவி மரியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது. 

அதேபோல் துபாயின் அடையாளமான புர்ஜ் கலிபாவை வித்தியாசமான கோணத்திலும், உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்தார். மேலும் துபாயைத் தவிர்த்து ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் படமாக்கப்பட உள்ள இப்படத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.


துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்...? அரபு நாட்டுப் பெண்களை கண் கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்? இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா? என்பதே கதையின் மையக்கரு. தமிழர்களே இல்லாத ஊரில் தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமரகாவியம் தான் இந்த `அரபு தாக்கு' என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

அரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு `அரபு தாக்கு' என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறோம். யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. ரத்தீஸ் வேஹா என்ற மலையாள இசையமைப்பாளர் தனது இசையின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ரசிகர்களை கவரும் வகையில் பெல்லி நடனம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது என்றார் இயக்குநர் பிரான்ஸிஸ். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions