சந்தானத்தின் எடையை குறைக்க ஆர்யா கொடுத்த சூப்பர் ஐடியா!

Bookmark and Share

சந்தானத்தின் எடையை குறைக்க ஆர்யா கொடுத்த சூப்பர் ஐடியா!

ஆர்யா நடித்த பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் சந்தானம். அதன்காரணமாக அவர்களுக்கிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. மேலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நல்ல நண்பேண்டாவாக பழகி வருகிறார்கள்.

அதனால்தான், தன்னுடன் காமெடியனாக நடித்த சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும், அவரது பாடி லாங்குவேஜை மாற்றுவதற்காக சில ஐடியாக்களை கொடுத்திருக்கிறார் ஆர்யா.

குறிப்பாக, தனது பெருத்த உடம்பை ஸ்லிம் பண்ணுவதற்காக ஆர்யாவிடம் சந்தானம் டிப்ஸ் கேட்டாராம். அப்போது, எனக்கு தெரிந்த வரையில் ஒரு டீ உள்ளது.

அதை குடித்தாலே உடம்பு ஸ்லிம்மாகி விடும் என்று சந்தானத்திடம் சொன்னாராம் ஆர்யா. அதைக்கேட்டு ஆச்சர்யமடைந்த சந்தானம், அது என்ன டீ, எங்கே கிடைக்கும் என்று ஆர்வமாக கேட்டபோது, மகாபலிபுரத்தில்தான் கிடைக்கும் என்றாராம்.

அதோடு, நாளை காலையிலேயே நாம் புறப்பட்டு செல்வோம் என்று சந்தானத்திடம் கூறிய ஆர்யா, அடுத்த நாள் அதிகாலையிலேயே சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவை தட்டினாராம்.

அதோடு காரோ, பைக்கோ இல்லாமல் சைக்கிளில் வந்திருந்தாராம். உடனே, சைக்கிளில் ஏறு மச்சான், டீ சாப்பிட போலாம் என்றாராம். அதையடுத்து, ஆர்யாவை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு சைக்கிளை மகாபலிபுரம் நோக்கி அழுத்தினாராம் சந்தானம்.

அங்கு சென்ற பிறகு ஒரு டீ கடையில் வழக்கமான ஒரு டீயை வாங்கிக்கொடுத்தாராம். அதை குடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு சந்தானத்தை சைக்கிள் மிதிக்க வைத்தாராம்.

இப்படியே அவர்கள் தொடர்ந்து சென்றதால், அந்த டீ கடைக்காரர் போண்டா- பச்சியெல்லாம் ரெடி பண்ணி வைத்தாராம். ஆனால், ஆர்யாவோ அதெல்லாம் வேண்டாம். ஒரேயொரு டீ மட்டும் போதும் என்று அதை மட்டுமே சந்தானத்துக்கு வாங்கிக்கொடுத்தாராம்.

அதைப்பார்த்து, இது சாதாரண டீ மச்சான், இதுக்கு ஏன் நாம மகாபலிபுரம் வரனும். சென்னையிலேயே கிடைக்குமே என்று சந்தானம் அலுத்துக்கொண்டாராம். அப்போது, இந்த டீ உங்க வீட்டு பக்கத்திலேயே கிடைக்கும்னு எனக்கும் தெரியும்.

ஆனா, அங்க குடிச்சா இவ்ளோ தூரம் நாம சைக்கிள் மிதிச்சு வந்திருக்க முடியுமா. உடம்புதான் இளைக்குமா? அதனால்தான் நான் இங்கே கூட்டிட்டு வந்தேன் என்றாராம் ஆர்யா. அப்போதுதான் சந்தானத்துக்கு நம்மை சைக்கிள் மிதிக்க வச்சு உடம்ப இளைக்க வைக்கத்தான் ஆர்யா இப்படி செய்திருக்கிறார் என்பது புரிந்திருக்கிறது.

அதையடுத்து, தொடர்ந்து அந்த சைக்கிள் பயிற்சியை செய்துதான் இனிமே இப்படித்தான் படத்துக்காக தன்னை ஸ்லிம்மாக மாற்றினாராம் சந்தானம். ஆர்யா கொடுத்த இந்த ஐடியாவுக்கு பிறகு இப்போது தினமும் சைக்கிள் மிதிச்சி உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம் சந்தானம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions