'பாகுபலி' டிரைலர், ஷங்கருக்கு ஒரு சவால்...?

Bookmark and Share

'பாகுபலி' டிரைலர், ஷங்கருக்கு ஒரு சவால்...?

தென்னிந்தியத் திரையுலகின் மிக முக்கியமான, பிரம்மாண்டமான இயக்குனர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் ஷங்கர். இந்தியத் திரையுலகமே இதுவரை அவரை வியந்து பார்த்து வந்திருக்கிறது. அவருக்கு  தற்போது கடும் போட்டி ஒன்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ரூபத்தில் வந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட 'பாகுபலி' படத்தின் டிரைலர் அந்த அளவிற்கு ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலகத்தச் சேர்ந்தவர்களைக் கூட மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக, இந்தியத் திரையுலகமே இதுவரை பார்த்திருக்காத காட்சிகளை உள்ளடக்கிய டிரைலராக 'பாகுபலி' டிரைலர் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த டிரைலரைப் பற்றி அமோகமாகப் பாராட்டி வருகிறார்கள்.

ஷங்கரின் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த 'எந்திரன்' திரைப்படம் தென்னிந்தியத் திரையுலகில் மிகப் பெரும் படமாகவும், பெரும் வசூலைக் குவித்த படமாகவும் இருந்தது.

'பாகுபலி' படம் தமிழில் எடுக்கப்பட்டுள்ளதாலும், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான நட்சத்திரங்கள் படத்தில் உள்ளதாலும் இந்தப் படம் தமிழிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜமௌலி இதற்கு முன் இயக்கிய 'நான் ஈ' படம் தமிழில் நல்ல வசூலைப் பெற்ற வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சுதீப் நடித்திருந்தாலும், அதை ரசிகர்கள் பெரிதாகப் பார்க்கவில்லை.

'பாகுபலி' படத்தின் பிரம்மாண்ட உருவாக்கத்தால், ஷங்கர் அடுத்து அவர் இயக்கப் போகும் படத்தில் இதை விட பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

'பாகுபலி' படத்தைத் தன்னுடைய சொந்தத் தயாரிப்பாகவும் உருவாக்கியிருக்கிறார் ராஜமௌலி. அதே போல ஷங்கரும் அவருடைய படத்தை சொந்தமாகத் தயாரிக்கும் நிலையை எடுப்பாரா என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான்.

ஷங்கரையும் மிஞ்சும் ஒரு படைப்பாளியாக ராஜமௌலியை இந்த 'பாகுபலி' வெளிக்காட்டும் என்றே கோலிவுட் வட்டாரங்களும், டோலிவுட் வட்டாரங்களும் பேசிக் கொள்கிறார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions