பாகுபலி - டிரைலர் வெளியீடு - ஆச்சர்யபடுத்தும் தகவல்கள்....

Bookmark and Share

பாகுபலி - டிரைலர் வெளியீடு - ஆச்சர்யபடுத்தும் தகவல்கள்....

ஒரே ஒரு டிரைலரால் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த படமாக விளங்கி வரும் பாகுபலி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்  நடைபெற்றது. நடிகர் சூர்யா பாகுபலி டிரைலரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், எதிர் நாயகன் ராணா டகுபதி, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா, நடிகர்கள் சத்யராஜ், நாசர், வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி, படத் தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, தமிழில் வெளியிடும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி பேசும் போது,

“பாகுபலி என்றால் பலம் பொருந்திய கைகளை உடையவன் என்று பொருள். அப்படி இந்தப் படத்துல பலம் பொருந்திய கைகளை உடையவர்களாக  நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஒவ்வொரு நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாரையும் சொல்லலாம்.

இந்தப் படத்துக்காக இரண்டரை வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் நான் வேலை பார்த்தேன் என்று சொல்வதை விட, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்துக்காக ராஜமெலி சார், கம்பராமாயணத்துல இருந்து, பொன்னியின் செல்வன்ல இருந்து பல விஷயங்களை ரெஃபெரென்ஸ் கொடுப்பாரு. பல உவமைகளைச் சொல்வாரு, இந்தப் படத்துக்காக அவர் கொடுத்த இன்புட்ஸ் நிறைய இருக்கு,” என்றார்.

சத்யராஜ் பேசிய போது,

“இந்தப் படம் ஒரு நேரடியான தமிழ்ப் படம். தயவு செய்து யாரும் டப்பிங் படம்னு நினைச்சிடாதீங்க, அதுதான் மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரண்டு முறை எடுத்திருக்கிறோம்.

சில பேர் சிரிக்க வைக்கப் ப்டம் எடுப்பாங்க, அழ வைக்கப் படம் எடுப்பாங்க, சிந்திக்க வைக்கப் படம் எடுப்பாங்க. ஆ.....ன்னு வாயைப் பிளந்து பார்க்கிற மாதிரி படம் எடுக்க முடியுமா.

இது அப்படியான ஒரு படம். இம்மாதிரியான ஒரு படத்தில் மீண்டும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. மீண்டும் ராஜமௌலி அப்படி ஒரு படம் எடுத்தால் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்.எனக்கு கடவுள் பக்தி இல்லை என்று ராஜமௌலிக்கும் தெரிந்திருக்கிறது.

ஒரு காட்சியில் பிரபாஸைப் பற்றிப் பாராட்டிப் பேசும் ஒரு காட்சி. என்னிடம் வந்து, “சார், உங்க தலைவர் எம்ஜிஆரைப் பற்றிப் பேசச் சொன்னால் எப்படிப் பேசுவாங்களோ, அப்படி ஒரு உத்வேகத்தோட பேசுங்கன்னு சொன்னாரு,”. நம்ம கிட்ட இருந்து எப்படி வேலை வாங்கறதுன்னு அவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காரு.

என்னை ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகன்னு தெரிஞ்சிக்கிட்டு அப்படிச் சொல்லி சைக்கலாஜிகலா வேலை வாங்கினாரு. இதுதான் படம், இதற்கு மேல் இனிதான் ஒரு படம் வரவேண்டும்,” என்றார்.

நடிகர் நாசர் பேசியதாவது,

“முதல்ல என் மேல நம்பிக்கை வச்சிருக்கிற கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்லணும். அவங்க சொல்றது ஒரு 70 சதவீதம் இருந்தால், நான் ஒரு 30 சதவீதம் என் பங்கைக் கொடுத்துடுவேன்.

இந்தப் படத்தோட கதையை ராஜமௌலி என்கிட்ட சொல்லும் போது மத்தவங்க மாதிரியே, எனக்கும் பரவசமா இருந்தது.  நான் அவர் கூட சைன்னு ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன்.

இந்தப் படத்தோட கதையைக் கேட்கும் போது எனக்கு ஒரு மகாபாரதக் கதையை கேட்கிற மாதிரி இருந்துச்சி. நான் நாடகத்துல இருந்து வந்தவங்கறதால எனக்கு சரித்திரப் படங்கள்ல நடிக்கிறது ரொம்ப பிடிக்கும்.

இந்தக் கதையை அவர் என்கிட்ட சொல்லும் போது என் கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் நான் கதை கேட்டேன். எல்லாரும் ஒரு படத்தைப் பத்தி பேசும் போது கஷ்டப்பட்டு நடிச்சோம்னு சொல்வாங்க. சத்யராஜ் சாருக்கு தாடி வச்சிக்கிறது கஷ்டம், எனக்கு அந்த மீசை வச்சிக்கிறது கஷ்டம். இந்தப் படத்தை நாங்க கஷ்டப்பட்டு பண்ணலை, திட்டமிட்டுப் பண்ணியிருக்கோம்,” என்றார் நாசர்.

ராணா டகுபதி பேசியதாவது,

“ராஜமௌலி சார் ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்திருக்காரு. இந்தியாவோட மிகப் பெரிய படைப்பு இந்தப் படம். இயக்குனர் ராஜமௌலிக்கு இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க வச்சதுக்காக என் நன்றி.

என்னுடைய முதல் படமா தமிழ்ப் படமா பண்ணணும்னு ஆசைப்பட்டேன். இப்ப இந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கிறது பெருமைதான். இந்தப் படத்துக்காக உடம்பை நிறையவே ஏற்றினேன்.

இப்பப் பார்க்கிறத விட 20 கிலோ கூடுதல் எடையா இருந்தேன். இந்தப் படத்துக்காக படப்பிடிப்புக்கு முன்னாடி சில மாதங்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைப் பயிற்சிக் கொடுத்தாரு.

அனுஷ்கா, தமன்னா இந்தப் படத்துல ரொம்ப ரொம்ப அழகா இருப்பாங்க. பிரபாஸ் என்னோட நல்ல நண்பராகிட்டாரு. இந்தப் படத்துல அவரும் கடுமையா உழைச்சிருக்காரு,” என ராணா டகுபதி தெரிவித்தார்.

தமன்னா பேசியதாவது,

“ரொம்ப நாள் கழிச்சி, தமிழ்ல பேசுறேன். இந்தப் படம் மூலமா நான் தமிழ்ல ரீஎன்ட்ரி ஆகற மாதிரி ஃபீல் பண்றேன். ஒரு புது கதாபாத்திரத்துல இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்.

இந்தப் படத்துல என்னை நடிக்கக் கூப்பிடும் போது ஏற்கெனவே 150 நாள் படப்பிடிப்பு முடிஞ்சி போயிருந்தது. என்னோட கேரக்டரை அவர் சொன்ன போது அவ்வளவு பெரிய கேரக்டர்ல நடிக்கப் போறமான்னு இருந்தது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா இவங்களோட நடிச்சது நல்ல அனுபவம். இந்தப் படத்துல இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஒரு படம்,” என்றார் தமன்னா.

படத்தின் நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா பேசும் போது, “ராஜமௌலி சாருக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி. நான் அவருடைய இயக்கத்துல ஏற்கெனவே விக்ரமார்க்குடுங்கற படத்துல நடிச்சிருந்தேன்.

அவரோட பட ஷுட்டிங்குக்குப் போனால் நல்ல நல்ல சாப்பாடு இருக்கும். ஜாலியா பிக்னிக் போற மாதிரியே இருக்கும். அதுக்கு நடுவுல அப்பப்ப நடிச்சிட்டு வருவேன். இந்தப் படத்தோட நடிச்சது ரொம்ப ஆர்வமான, எக்சைட்மென்ட்டா ஒன்று,” என அனுஷ்கா தெரிவித்தார்,” என அனுஷ்கா சுருக்கமாகவே பேசினார்.

பிரபாஸ் பேசியதாவது,

“ராஜமௌலி சார் ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கதையைச் சொன்னாரு. அப்ப நான் தொடர்ந்து நாலு பிளாப் கொடுத்துட்டு உட்கார்ந்துட்டிருக்கேன். அதுக்கு பத்து வருஷம் முன்னாடி நான் மூணு பிளாப் கொடுத்திருந்த போதுதான், சத்ரபதி படம் என்னை வச்சிப் பண்ணாரு.

பாகுபலி கதையை அவர் நாலு வரிதான் எனக்கு சொன்னாரு. அவர் சொல்லும் போது எனக்கு பிரமிப்பா இருந்தது. தேவசேனா கேரக்டர், சிவகாமி கேரக்டர், சத்யராஜ் கேரக்டர்லாம் ரொம்ப அருமையா இருக்கும்.

இந்த மாதிரி படம் நமக்கு வாழ்க்கையில ஒரு முறைதான் வரும். மறுபடியும் கிடைக்குமான்னு தெரியாது.இந்தப் படத்துல நிறைய சண்டைக் காட்சிகள், வாள் சண்டை, குதிரையேற்றம் இப்படி இருந்தது.

இந்தப் படத்துக்காக 220 நாள் சண்டைக் காட்சியில மட்டும் நடிச்சிருக்கேன். 20 நாள், 40 நாள், 50 நாள் தொடர்ந்து சண்டைக் காட்சிகளே எடுத்துக்கிட்டிருப்போம். இந்தப் படத்தையும், என்னையும் தமிழ் ரசிகர்கள் ரசிப்பாங்கன்னு நம்பறேன்,” என பிரபாஸ் பேசினார்.

படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியதாவது,  

“நிறைய மேடைகள்ல பேசியிருக்கேன், பாம்பே போன போது கூட பேசினேன். ஆனால், சென்னைக்கு வந்து இந்த மேடைல பேசுறது ரொம்ப எமோஷனலா இருக்கு. நம்ம சொந்த ஊர்ல இருந்து வெளியூருக்கு போயிட்டு, அங்க ஒரு பேர் வாங்கிட்டு, திரும்பவும் சொந்த ஊர் வந்தால் எந்த மாதிரி ஒரு எமோஷனல் இருக்குமோ அப்படியிருக்கு.

சென்னையிலதான் என்னோட ஸ்கூல், காலேஜ்,  நான் படிச்சது எல்லாமே  இங்கதான். சென்னையிலதான் சினிமாவோட கிராமர் என்னங்கறதையே கத்துக்கிட்டேன். தமிழ்த் தாய்க்கு என்னுடைய நன்றி.இந்த மாதிரி படம் பண்றது பல இயக்குனர்களுக்கு ஒரு கனவு மாதிரி.

இந்தப் படம் எனக்கு கனவு கிடையாது, நான் இந்த உலகத்துலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். எங்க அப்பா என்னை லைப்ரரில சேர்த்த போது, நான் அதிகமா படிச்சது அமர் சித்ரா கதைகளைத்தான். அந்த வயசுல எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. ஸ்கூலுக்குப் போயி அந்தக் கதைகளைச் சொல்வேன்.

ஆனால், நான் இயக்குனரானதும், அந்த மாதிரி  கதையைப் போய் தயாரிப்பாளர்கள் கிட்ட சொன்னால், வெளிய போடான்னு சொல்வாங்க. அந்த மாதிரி கதைகள் எல்லாம் நம்ம கதைகள்தான். ராஜா ராணி பற்றி, கோட்டைகள் வச்சி கதை எடுக்கணும்னு ஆசை.

இதுக்கு முன்னாடி என்னோட சில படங்கள்ல 5,6வது படத்துல 20 நிமிஷம், 40 நிமிஷம்னு சரித்திரிக் கதைகளைப் பண்ணன். அந்தப் படங்கள் வெற்றியடைஞ்சதும் தயாரிப்பாளர்களுக்கு அந்த மாதிரி படம் எடுத்தால் மக்கள் பார்ப்பாங்க, நாம போடற பணம் திரும்ப வரும்னு நினைச்சாங்க.

ஆக, இந்தப் படத்தை நான் என்னோட முதல் வகுப்பு படிக்கும் போதே என் மனசுல பிரமிக்க வச்ச ஒரு விஷயம்.இந்தப் படத்துல எவ்வளவு பேர் உழைச்சிருக்காங்கன்னு எண்ணிக்கையில சொல்ல முடியாது.

ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டுமே 2000 பாடி பில்டர்களைப் பயன்படுத்தியிருக்கேன். அவங்களுக்கு மேக்கப் போட்டு, விக் வச்சி, அவங்க கையில கத்தியைக் கொடுத்து வந்து நிறுத்துறதுக்கே அவ்வளவு நேரமாகிடும். படத்துக்காக 1000 மீட்டர் நீளத்துக்குக் கூட ப்ளூ-மேட் இருக்கும்.  

இந்தப் படம் ஒரு படமா இல்லாம ஒரு தொழிற்சாலை மாதிரிதான் நடந்தது. இப்ப யோசிச்சிப் பார்த்தால், எப்படி அப்ப எடுத்தோம்னு ஆச்சரியமா இருக்கு. இந்தப் படத்துல இந்தியாவோட டாப் டெக்னீசியன்கள் உழைச்சிருக்காங்க,” எனப் பேசினார்.தொடர்ந்து ராஜமௌலி படத்தில் நடித்த முக்கியமான நட்சத்திரங்களைப் பற்றித் தனித்தனியாகப் பாராட்டிப் பேசினார். ராஜமெளலி தெலுங்கு வாடையே இல்லாமல்  தமிழில் படத்தைப் பற்றி நீண்ட நேரம் தெளிவாகப் பேசியது சென்னை மீது அவருக்கிருந்த பாசத்தை வெளிப்படுத்தியது.

இறுதியாக நடிகர் சூர்யா பாகுபலி படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தமிழில் படத்தை வழங்கும் கே.ஈ.ஞானவேல்ராஜா நன்றி தெரிவித்துப் பேசினார்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions