நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது – கே.பாக்யராஜ் சவால்..!

Bookmark and Share

நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது – கே.பாக்யராஜ் சவால்..!

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  தான் ‘கன்னா பின்னா’. 

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’. 

இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார்.. நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார். 

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலைப்புலி தாணு கலந்துகொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார்., அவருடன் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் & தயாரிப்பாளர் விஜயமுரளி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்..

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்.. அது அவர்களின் வயிற்றுப்பிழைப்பு என்பதால் அந்த திருட்டுத்தொழிலை செய்பவன் செய்துகொண்டு தான் இருக்கிறான்..

இதில் மக்களையும் நாம் குறைசொல்ல முடியாது.. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப்பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள். பஸ்ஸில் ஏறும் ஜனங்கள் அதுக்காக கண்ணை மூடிக்கொண்டு போவார்களா என்ன..? அதேபோல கேபிளில் போடும்போது பார்க்காமல் இருப்பார்களா என்ன..?

அதனால் இப்படி திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும் விற்பவர்களையும் நாம் ஒன்றும் பண முடியாது.. ஆனால் மக்கள் ரசிக்கும் விதமாக நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.. லாபமும் உறுதி.. இப்போது வெளியான ஜோக்கர் படம் கூட பெரிய நடிகர்கள் பட்டாளம் இல்லை தான்.

ஆனால் அரசியலை நையாண்டி செய்யும் படம் என மவுத் டாக்கின் மூலம் செய்தி பரவியதால் மக்கள் தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். ரஜினி உட்பட பலரும் படத்தை பாராட்டியுள்ளார்கள்.

நானும் கூட இப்படி ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் தேடிப்போய் பார்த்தேன்.. ஆக நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது..

இன்று படம் இயக்குனர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவுசெய்து தயாரிப்பாளரை காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள். முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள்.. தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார்.

ஆனால் நீங்கள் கோட்டைவிட்டால் ஒரு படத்தோடு அவ்வளவுதான். உங்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது கேள்விக்குறிதான். அதனால் முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக நல்ல தரமான படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்.

அதனால் தான் நான் என் படங்களின் கதை விவாதத்தின்போது தயாரிப்பளர்களை உள்ளே அனுமதிக்கவே மாட்டேன். கதையில் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்..

இதற்காகவே ஆரம்பத்தில் காஸ்ட்யூமர், மேக் அப் மேன், லைட்மேன் என சினிமாவில் உள்ள டெக்னீசியன்களை தயாரிப்பாளர்களாக மாற்றி படம் எடுத்தேன்.. அப்போது நிறைய பேர் “என்ன இது பாக்யராஜ் இப்படி வேலை பார்க்குற ஆளுங்களை எல்லாம் தயாரிப்பாளரா மாத்திட்டு இருக்கான்னு எம்மேல வருத்தம் கூட பட்டாங்க.. நான் முதன் முதலில் கதை சொன்ன பெரிய கம்பெனி என்றால் அது ஏவி.எம் நிறுவனம் தான்”

என இளையதலைமுறை இயக்குனர்களுக்கு ஆலோசனையும் கூறினார் பாக்யராஜ்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions