மீடியாவை பகைத்துக்கொண்ட கலைஞர்கள் அடுத்தக்கட்டதிற்கு போகமுடியாது: பயில்வான் ரெங்கநாதன்

Bookmark and Share

மீடியாவை பகைத்துக்கொண்ட கலைஞர்கள் அடுத்தக்கட்டதிற்கு போகமுடியாது: பயில்வான் ரெங்கநாதன்

நடிகர் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதன் நிறைவு நாளில், மூத்த பத்திரிகையாளர்களை மேடைக்கு வரவழைத்து பேசவைத்தனர். அப்போது, பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, 

நான் போலீஸ் வேலை வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தவன். சிவகுமாரின் திருமண செய்தியை எடுத்த பெருமை எனக்கு உண்டு. அதேசமயம், சிவகுமாரால் நான் ஒருமுறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் ஒரு அறை வாங்கியுள்ளேன். அதற்கு என்ன காரணமென்றால், அந்த நேரத்தில் சிவகுமார் வீட்டில் துக்கமான காரியம் ஒன்று நடந்தது. அதைப்பற்றிய செய்தியை ஒன்றை பத்திரிகையில் போட்டேன். 

அவ்வளவுதான், திடீரென்று எம்.ஜி.ஆரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் சத்யா ஸ்டுடியோவுக்கு சென்றேன். எனக்கு முன்னால் சிவகுமார், எம்.ஜி.ஆர் அறைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே நானும் சென்றேன். உள்ளே சென்றதும், கதவை சாத்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். 

யாரைக் கேட்டு இந்த செய்தியை போட்டாய் என்று கேள்வி கேட்டார். நாளைக்கே அந்த செய்திக்கு மறுப்பு போடு என்று சொன்னார். அந்த சம்பவத்தை நான் என் வாழ்நாளில் கடைசி வரைக்கும் மறக்கவே மாட்டேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, அவருக்கு பின்னால் சில விஷயங்களில் நான் சிவகுமாரின் தொண்டன். 
நான் 25 வருடத்துக்கு முன்பே, நம்பியாரும், சிவகுமாரும் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை பார்த்திருக்கிறேன். அதை பின்பற்றி இன்றுவரைக்கும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அவர் சொன்ன பல பழக்க வழக்கங்களை நான் பின்பற்றி வருகிறேன். 

இன்னொரு முக்கியமான விஷயம், என்னுடைய மகள் திருமண விழாவிற்கு எந்த நடிகரையும் அழைக்கவில்லை. சிவகுமாருக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தேன். அழைப்பு விடுக்கச்சென்ற என்னை அமரவைத்து அரை மணி நேரம் உரையாடினார். அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நான் பார்த்தவகையில் நிறைய விஷயங்களை பேசுகிற ஒரே நடிகர் சிவகுமார்தான். அவரிடம் மாட்டிக்கொண்டால் நிறைய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்.
பத்திரிகையாளர்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி மனம் திறந்து பேசக்கூடிய ஒரே நடிகர் சிவகுமார்தான். நான் எல்லா நடிகர்களை பற்றியும் கிசுகிசுக்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், கிசுகிசுக்களில் சிக்காத ஒரே நடிகர் சிவகுமார்தான். அவருடைய இரண்டு மகன்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய மகன் கல்யாணத்திற்கு அவர்கள் அலுவலகத்திற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்தேன். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் என்னிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் சிவகுமாரின் இரண்டு மகன்களும் அவர்களது அப்பாவை பின்பற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். 

அதேபோல், மீடியாவை பகைத்துக் கொண்ட எந்த கலைஞனும் அடுத்தக்கட்டத்திற்கு போனதே கிடையாது. இதை, எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மீடியாவில் எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை சரியாக கொடுங்கள். சிவகுமார் அவர்கள் மூன்று முதல்வர்களின் அன்பையும் பெற்றவர். அரசியல் சார்பில்லாத ஒரு நல்ல மனிதனாக சிவகுமாரை ரொம்பவும் எனக்கு பிடிக்கும் என தனது பேச்சை முடித்தார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions