யாருக்காக இந்த திரைப்பட விழா?

Bookmark and Share

யாருக்காக இந்த திரைப்பட விழா?

ஒரு நல்ல விஷயத்தை எப்படி வீணடிப்பது என்பதும் அதனை வைத்து எப்படி காசு அடிப்பது என்பதும் நம்ம ஆட்களுக்கு அத்துப்படி... அதுதான் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் எதிரொலிக்கிறது. இதனால் தமிழ் சினிமாவுக்கோ, தமிழ் சினிமா ரசிகர்களுக்கோ என்ன பயன்? என்றால் பெரிதாக ஒன்றும் இருக்காது.

ஆனாலும் ஆண்டுதோறும் இந்த திரைப்பட விழாவுக்கு ஐம்பது லட்சத்தை ஒதுக்குகிறது தமிழக அரசு.இந்த ஆண்டு கூட இவ்வளவு களேபரங்களுக்கு இடையேயும் கூட அந்த தொகை தரப்பட்டுவிட்டது. ஆனால் திரையிடப்படும் படங்களில் பாதி கூட சர்வதேச திரைப்பட விழா படங்களுக்கான தகுதி படைத்தவை அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற கலை விழாவுக்கென்று தனியாக கலை அரங்கம் கட்டப்படும் என அறிவித்து கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்கி வாலாஜா சாலையில் வேலையைத் தொடங்கினார்கள். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. இதனாலேயே பாஸை வைத்துக்கொண்டு அண்ணாசாலைக்கும் மயிலாப்பூருக்கும் வடபழனிக்கும் சடுகுடு ஆட்டம் ஆட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர் சினிமா ரசிகர்கள்.

அதோடு இந்த சினிமா விழாவை வைத்து திரைப்பட விழா நிர்வாகிகள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல... தினமும் நட்சத்திர ஹோட்டல் பார்ட்டிகள், நிர்வாகிகளுக்காக பிரத்யேக காட்சிகள் என கவர்ன்மென்ட் காசை தண்ணியாக செலவழிக்கிறார்கள்."இந்த முறை டிசம்பர் மாதத்தில் நடக்கவிருந்த விழா, தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்கவிருக்கிறது. சென்னை புத்தக திருவிழாவிற்கு அரசு ஏதாவது சலுகை அளிக்கிறதா, பணம் கொடுக்கிறதா என்று தெரியவில்லை.

கலைஞர் ஒரு கோடி கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பின்னர் அரசு தரப்பில் இருந்து என்ன மாதிரியான உதவிகள் கிடைத்தது என்று தெரியவில்லை. நாட்டில் தினமும் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க அரசு சென்னை திரைப்பட விழாவிற்கு நிதியளிக்கிறது. விவசாயிகளும், சாதாரண மக்களும் தங்களின் சொந்த பணத்தை எடுப்பதற்கே வங்கிகளின் வாசலில் காத்திருக்கிறார்கள். தவிர புத்தக திருவிழா நடைபெறும் அதே நாட்களில் திரைப்பட விழாவும் நடைபெறுகிறது.

புத்தக திருவிழா ஏற்கனவே பண மதிப்பிழப்பு, பணப் புழக்கமின்மை, இடமாற்றம் என்று தத்தளிக்கும்போது இதே காலக்கட்டத்தில் திரைப்பட விழாவை நடத்துவது சமூக பொறுப்பின்மை என்றே சொல்வேன். நான் முழுக்க சினிமாவை ஆதரிப்பவன். ஆனால் அந்த சினிமா மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.

எந்த வகையிலும் இந்த ஆண்டு திரைப்பட விழா மக்களுக்கானது அல்ல. இந்த ஆண்டு சென்னை திரைப்பட விழாவை நான் புறக்கணிக்கிறேன். அரசு உதவி இல்லாமல் திரைப்பட விழாக்கள் நடக்க வேண்டும்.

அப்போதுதான் அது கலகக்குரல் எழுப்ப முடியும். அரசு உதவியோடு நடந்தால் நிச்சயம் அங்கே கலகக்குரல் எழ வாய்ப்பில்லை. வேறு வழியில்லை சுயாதீன சினிமா போல், சுயாதீன திரைப்பட விழாவும் அவசியம்,' என்று ஆதங்கப்பட்டுள்ளார் அருண் என்பவர் முகநூலில். இதெல்லாம் திரைப்பட விழா குழுவினரின் கவனத்துக்கு செல்லுமா?


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions