அப்துல்கலாம் புதைக்கப்படவில்லை, அவர் விதைக்கப்பட்டுள்ளார்; நடிகர் தாமு பேச்சு

Bookmark and Share

அப்துல்கலாம் புதைக்கப்படவில்லை, அவர் விதைக்கப்பட்டுள்ளார்; நடிகர் தாமு பேச்சு

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘கும்பெஸ்ட் 16’ என்ற பெயரில் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். விழாவில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கல்லூரி ஒரு கோவில் போன்றது. இங்கிருந்து வெளியே வரும் நீங்கள் ஒரு சிறந்த என்ஜினீயராக வர வேண்டும். பேராசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். பெற்றோருக்கு சிறந்த மகனாகவும், ஆசிரியர்களுக்கு சிறந்த மாணவனாகவும் வரவேண்டுமானால் அருகில் இருப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு முடித்து விட்டு என்ஜினீயராக வர வேண்டும் என்றால் நீங்கள் தியாகம் செய்ய வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆசீர்வாதம் கிடைத்து விட்டால் பெரியவர்களாக- சிறந்த என்ஜினீயர்களாக வரலாம்.

மாணவர்கள் நன்றாக பேச வேண்டும், வகுப்பில் ஆசிரியர்களாக மாற வேண்டும்.

அப்துல்கலாம் புதைக்கப்படவில்லை, அவர் விதைக்கப்பட்டுள்ளார். அவர் உங்களைத்தான் நம்பினார். நீங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

விளக்கிலே எண்ணெய் ஊற்றி, திரியை போட்டு உங்களை தீபமாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள்தான். கல்வியை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு பெற்றோர்கள் இரண்டு ‘கிங்’-களை கற்றுத் தருவதில்லை. ஆனால் நண்பர்கள் அதை கற்று தருவார்கள். ‘சுமோக்கிங்’, ‘டிரிங்கிங்’ என்ற அந்த இரண்டு ‘கிங்’ பழக்கத்தை தயவு செய்து கற்றுக்கொள்ளாதீர்கள்.

ஏழையாக பிறப்பது தவறல்ல. ஆனால் இறக்கும்போது ஏழையாக இறப்பதுதான் நமது தவறு. எங்களிடம் நீங்கள் ஆட்டோகிராப் வாங்குவதற்கு பதில் உங்கள் கையெழுத்து ஆட்டோகிராபாக மாறினால் இந்தியா வளர்ந்த நாடாக மாறி விடும்.

மேற்கண்டவாறு நடிகர் தாமு பேசினார்.

மேலும் ரெயில் ஓடுவது, ஹெலிகாப்டர் பறப்பது உள்பட பல்வேறு ஓசைகளை எழுப்பி பல குரல் நிகழ்ச்சி நடத்தி, மாணவர்களை நடிகர் தாமு மகிழ்வித்தார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளையும் அதேபோன்று செய்ய வைத்தார். மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில் கல்லூரி பதிவாளர் ரா.சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions