முன்னாள் உலக அழகி டயானா ஹைடனுக்கு பெண் குழந்தை

Bookmark and Share

முன்னாள் உலக அழகி டயானா ஹைடனுக்கு பெண் குழந்தை

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையும் ஆன 42 வயது டயானா ஹைடன், தன்னுடைய கணவர் கொலின் டிக்குடன் மும்பையில் வசிக்கிறார். இவர்களது திருமணம் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்தது.

மும்பையில் உள்ள பிரபல தனியார் தொண்டு நிறுவனத்தில் நிர்வாகியாக கொலின் டிக் பணிபுரிகிறார். நடிகை டயானா ஹைடன் சினிமாவில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால், குழந்தை பிறப்பை தள்ளி போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து இருந்தார். 

அதன்படி, திருமணம் ஆவதற்கு முன்னரே, அதாவது தன்னுடைய 34-வது வயதில், இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக டாக்டர்களின் ஆலோசனைப்படி, ‘கருமுட்டையை உறைய வைக்கும் முறை’ என்ற நவீன மருத்துவ யுக்தியை அவர் கையாண்டார்.

இந்த முறையின் கீழ் பெண்களின் கருமுட்டை வெளியே எடுக்கப்பட்டு, உறைய வைத்து பதப்படுத்தப்படும். பின்னர், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது உடலில் செலுத்தி கருவை உருவாக்க முடியும். இந்த முறையை தான் நடிகை டயானா ஹைடனும் பின் பற்றினார். 

இதற்காக கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவருடைய உடலில் இருந்து 16 கருமுட்டைகளை வெளியே எடுத்து டாக்டர்கள் அதனை பதப்படுத்தினர்.

இந்த சூழ்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அந்த கருமுட்டைகள் அவரது உடலினுள் செலுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, டயானா ஹைடன் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 9-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறிதுநேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையின்கீழ்,

42 வயதில் பெண் ஒருவர், குழந்தை பெறுவது இதுவே முதல் முறை என்றும், வழக்கமாக வேலைக்கு செல்லும் அல்லது வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் 35 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த முறையை நாங்கள் பரிந்துரைப்போம் என்றும் மகப்பேறு மருத்துவர் நந்திதா தெரிவித்தார். 

பொதுவாக, பிறந்த குழந்தையின் எடை 2.6 கிலோவும், உயரம் 48 சென்டிமீட்டரும் இருக்க வேண்டும். ஆனால், டயானா ஹைடனின் குழந்தை வழக்கத்தை விட சற்று கூடுதலாக 3.7 கிலோ எடையும், 55 செ.மீ., உயரமும் இருக்கிறது. இந்த குழந்தைக்கு ஆர்யா ஹைடன் என்று பெயரிட்டுள்ளனர்.

தாய்- சேய் இருவரும் தற்போது நலமாக இருப்பதாகவும், டயானா ஹைடனின் கணவர் கொலின் டிக் கூட இருந்து இருவரையும் கவனித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions