
இன்று உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது.
இந்தவகையில் சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றுள்ளது மராத்திய திரைப்படமான 'கோர்ட்'.
சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'கோர்ட்' மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 18 விருதுகளைப் பெற்றுள்ளது.
மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்குரைஞர் போராடுகிறார்.
இது நாயகன் இது வில்லன் என்பது போன்ற ஒற்றைத்தன்மையான காட்சி சித்தரிப்புகள் படத்தில் கிடையாது. சொல்லப்போனால் படத்திற்கு ஹீரோவே கிடையாது. படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான்.
இந்த அற்புதமான படம், இந்தியா சார்பில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகுபலி, என்.எச்.10, பஜ்ரங்கி பாய்ஜான், பிக்கு ஆகிய படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்காக தேர்வு குழுவால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post your comment
Related News | |
![]() |