ஏரியில் மூழ்கி பலியான நடிகர் உதயின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

Bookmark and Share

ஏரியில் மூழ்கி பலியான நடிகர் உதயின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் துனியா விஜய் ‘மாஸ்திகுடி‘ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லன் நடிகர்களாக உதய் (வயது 28) மற்றும் அனில் (32) நடித்து வந்தார்கள். ‘மாஸ்திகுடி‘ படத்தின் இறுதிகட்ட சண்டை காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு ராமநகர் மாவட்டம் தாவரகெரே அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரிப்பகுதியில் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. ஏரியின் மேல் பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்தபடி நடிகர் துனியா விஜயுடன், வில்லன் நடிகர்களான உதய், அனில் ஆகியோர் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியின் நடுப்பகுதியில் 3 பேரும் குதித்தார்கள். அவர்களில் நடிகர் துனியா விஜய் மட்டும் காப்பாற்றப்பட்டார். ஆனால் நடிகர்கள் உதய், அனில் ஏரி தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களது உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள் ஈடுபட்டார்கள். கடந்த 7-ந் தேதியும், நேற்று முன்தினமும் நடைபெற்ற தேடுதல் பணியில் அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 3-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் 8 படகுகளில் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று நடிகர்கள் உதய், அனில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அத்துடன் நவீன கேமராவை ஏரி தண்ணீருக்குள் விட்டு, 2 பேரின் உடல்களை தேடும் பணியும் நடைபெற்றது. மேலும் மங்களூரு மற்றும் கார்வாரில் இருந்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த நீச்சல் வீரர்கள் ஏரியின் அடிப்பகுதி வரை சென்று உதய், அனிலின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில், ஏரியில் நடுப்பகுதியில் இருந்து ஒருவரது உடல் தானாகவே மேலே வந்தது. இதனை பார்த்த மீட்பு குழுவினர், அந்த உடலை மீட்டார்கள். பின்னர் அவரது உடலை ரப்பர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மீட்கப்பட்டது நடிகர் அனிலின் உடல் என்று போலீசாரும், அதிகாரிகளும் தெரிவித்தார்கள். பின்னர் மீட்கப்பட்ட நடிகரின் உடல் உறவினர்களிடம் காண்பிக்கப்பட்டது. அப்போது அந்த உடல் நடிகர் உதயின் உடல் என்று அவருடைய குடும்பத்தினர் அடையாளம் காட்டினார்கள்.

ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் நடிகர்கள் உதய் மற்றும் அனில் குதித்த போது 2 பேரும் சட்டை அணியாமல் இருந்தார்கள். மேலும் 2 பேரும் தாடியும் வளர்த்து இருந்தார்கள். இதனால் எந்த நடிகரின் உடல் மீட்கப்பட்டது என்பதை கண்டறிவதில் சிறிது நேரம் குழப்பம் நீடித்தது. பின்னர் நடிகர் உதயின் உடல் தான் மீட்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தார்கள். ஆனால் அவரது உடலை மீன்கள் கடித்து இருந்தன. இதனால் முகம், வயிற்று பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. அதன்பிறகு, நடிகர் உதயின் உடல் ஏரிப்பகுதியில் வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், உதயின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நடிகர் உதயின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு பனசங்கரி கே.ஆர். ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து தாய் கவுசல்யா கதறி அழுததுடன், மயக்கம் போட்டும் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

நடிகர் உதய் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த, அவரது வீட்டு முன்பு உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர், ஏராளமான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக திப்ப கொண்டனஹள்ளி ஏரிக்கு போலீஸ் மந்திரியும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் வந்தார். பின்னர் அவர் மீட்பு பணிகளை பார்வையிட்டதுடன், ஏரிப்பகுதியில் இருந்த நடிகர்கள் உதய், அனிலின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

நடிகர் அனிலின் உடல் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் சோகத்தில் மூழ்கினார்கள். அவரது உடலை தேடும் பணி நேற்று இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. ஏற்கனவே உதயின் உடல் தானாகவே மேலே வந்ததால், நடிகர் அனிலின் உடலும் ஏரி தண்ணீரில் தானாகவே மேலே வரும் என்று மீட்பு குழுவினர் கருதுகிறார்கள். இருப்பினும் அனிலின் உடலை தேடும் பணியை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். அனிலின் உடல் கிடைத்ததும் உதய், அனில் ஆகிய 2 பேரின் உடல்களுக்கும் இன்று இறுதி சடங்கு நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். சினிமா படப்பிடிப்பின் போது ஏரியில் மூழ்கி பலியான நடிகர் உதயின் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏரியில் மூழ்கி நடிகர்கள் உதய், அனில் பலியானதற்கு போதிய பாதுகாப்பு வசதிகளை படக்குழுவினர் செய்யாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ‘மாஸ்திகுடி‘ படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுத்ரு, இயக்குனர் நாகசேகர், சண்டை பயிற்சியாளர் ரவிவர்மா, மேலாளர் பரத் ஆகியோர் மீது தாவரகெரே போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுத்ரு கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சுந்தர் பி.கவுத்ரு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இயக்குனர் நாகசேகர், சண்டை பயிற்சியாளர் ரவிவர்மா, மேலாளர் பரத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் நாகசேகர் நேற்று தாவரகெரே போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவிவர்மா, பரத்தை போலீசார் தேடிவருகிறார்கள். 

 


Post your comment

Related News
நடிகர் துனியா விஜய் கைதாகி ஜாமீனில் விடுதலை
நடிகர்கள் நீரில் மூழ்கி பலியான விவகாரம்: கன்னட சினிமா டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் போலீசில் சரண்
கன்னட நடிகர் துனியா விஜய் 2-வது திருமணமா?
தூத்துக்குடி-2 படத்தில் நடிகரான சஞ்சய்ராம்!
நடிகர் துனியா விஜய் மனம் மாறினார்: மனைவி நாகரத்னா சேர்ந்து வாழ முடிவு
நிஜ ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் 'பூர்வகுடி'!
நடிகர் கருணாஸ் பரமக்குடி செல்ல தடை விதித்த போலீஸ்!
பலத்த மழையால் தவிப்பு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரில் சென்னைக்கு வந்த - சூர்யா - அனுஷ்கா!
எம்.ஜி.ஆர்.: சிவாஜி படங்கள் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions