
பரதேசி, ஜில்லா படங்களில் வில்லனாகவும், எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் ஆர்.கே. இவரே தயாரித்து ஹீரோவாகவும் நடித்த என் வழி தனி வழி படம் நேற்று வெளியாகி உள்ளது.
மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் என்கௌண்ட்டர் ஸ்பெலிஸ்ட்டாக நடித்துள்ளார் ஆர்.கே. ஆஹா படத்தில் நடித்த ராஜிவ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ஆகிய இருவரும் என் வழி தனி வழி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளனர்.
ஆஷிஷ் வித்யார்தியும் வில்லத்தனமான வேடத்தில் நடித்துள்ளார். இத்தனை வில்லன்கள் இருந்தாலும் என் வழி தனி வழி படத்தில் பிரதான வில்லியாக நடிகை ரோஜா நடித்திருக்கிறார்.
போலீஸ் என்கௌன்ட்டரில் கணவனை பறிகொடுத்ததால் திடீரென்று அரசியலுக்கு வந்து எம்.பி.யான பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. படத்தில் ரோஜா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ரேணுகா தேவி.
ரோஜாவின் கதாபாத்திரமும், அவரது பெயரும் வெங்கடேஷ பண்ணையாரின் மனைவியும் முன்னால் எம்.பி.யுமான ராதிகா செல்வியை ஞாபகப்படுத்துவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன் வெங்கடேஷ் பண்ணையார் என்கௌன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அனுதாபத்தை வைத்து அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராதிகா செல்விக்கு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தது தி.மு.க. அத்தேர்தலில் வெற்றிபெற்ற ராதிகா செல்வி உள்துறை இணை அமைச்சராகவும் ஆனார்.
என் வழி தனி வழி படத்தில் ரோஜாவின் கதாபாத்திரம் ராதிகா செல்வியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
Post your comment