“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!

Bookmark and Share

“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும்  “கருப்பு”!

சல்மான்கான், ஷாருக்கான் என வட இந்திய நடிகர்களில் தொடங்கி விஜயகாந்த், ஆர்யா, ஜீவா, த்ரிஷா, ஆர்.கே, கருணாஸ் என நம்மூர் நட்சத்திரங்களில் பலரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசையில் ஹோட்டல் பிஸினஸில் குதிக்காதவர்களே இல்லை எனலாம்!.  

இதில் சிலர் வெற்றியும், பல நட்சத்திரங்கள் தோல்வியும் கண்டு வந்தாலும் ஹோட்டல் பிஸினஸ் என்றால் ஒரு கை பார்த்து விடலாம்... என களம் இறங்காத கலைஞர்கள் குறைவு! அந்த வகையில் ஹோட்டல் பிஸினஸில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் இடம் பிடித்தே தீருவேன்... என கங்கணம் கட்டிக்கொண்டு சென்னையில் நல்லதொரு செட்டி நாடு ரெஸ்டாரண்ட்டை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு... எனும் செய்தி கேள்விப்பட்டு அவரிடமே விசாரித்தோம். நீங்க கேள்விபட்ட விஷயம் உண்மை தாங்கண்ணே...இத்தனை நாளா நடிச்சு, சிரிச்சு குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருந்தேன்.

அத வச்சி,  ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி நாலு எழுத்து படிச்சு அறியாத எனக்கு, நாலு ஏழை பிள்ளைங்களுக்கு பயன்படுறமாதிரி இஸ்கூல் ஆரம்பிக்கணுங்கறது ஆசை... அது முடியாத பட்சத்தில் டாக்டருக்கு படிச்ச என் பொஞ்சாதிக்காக சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டி தரணுங்கறது ஆசையா இருந்துச்சு! இந்த சமயத்தில கூட்டாளிங்க சில பேரு கொடுத்த ஐடியா., கொஞ்சம் காச வச்சிக்கிட்டு முழுசா இஸ்கூலும் கட்டமுடியாது, பெரிசா ஆஸ்பத்திரியும் கட்டமுடியாது... அந்த காசுல ஒரு படம் சொந்தமா எடுத்தோமுன்னா நல்ல லாபம் கிடைக்கும்... அத வச்சு இஸ்கூலு, ஆஸ்பத்திரி, இரண்டையும் பெரிய லெவல்ல கட்டலாம்... அப்படின்னாங்க... ஐடியா நல்லாருக்கேன்னு அகலக்கால் வச்சேன்.. அப்படி சொன்னவரையே டைரக்டரா போட்டு “வேல் முருகன் போர்வெல்ஸ்”ன்னு  ஒரு படத்தை சொந்தமா தயாரிச்சு ஹீரோவாவும் நடிச்சேன்.

ஒரு கோடி ரூபாக்கு மேல நஷ்டம்! அதான்., ஆரம்பத்துல டீக்கடையில வேல பார்த்த நாம் ஏன்? டிபன் கடை போடக்கூடாதுன்னு யோசிச்சேன்..? இந்த சமயத்துல என் கோடம்பாக்கத்து ஆருயிர் நண்பர் பாடலாசிரியர் ஜெயம்கொண்டானின் ஞாபகம் வந்துச்சு! வளரும் பாடலாசிரியராகவும் இருந்து கொண்டு சினிமா கனவுகளுடன் சென்னை நோக்கி வரும் இளைஞர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும், வேலைவாய்ப்பும் கொடுத்தபடி கே.கே.நகர், காமராஜர் சாலையில் சின்ன இடத்தில் 'கவிஞர் கிச்சன்' எனும் ஹோட்டலை பெரிய மனதுடன் நடத்தி வரும் என் நண்பர் ஜெயம்கொண்டான், நல்ல கைப்பக்குவம் உடையவர்.

சிவகங்கை சீமையை சேர்ந்த எனக்கும் காரைக்குடி  செட்டி நாட்டு சமையல் மீது ஒரு பெரிய பாசம், நேசம் உண்டுங்கண்ணே! எனவே என் நட்பு ஜெயம்கொண்டானுக்காகவும், சென்னை வாழ் மக்களின் நாக்கிற்கு நல்ல ருசி தருவதற்காகவும் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பல லட்சம் செலவில் ஒரு செட்டிநாடு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க நல்ல இடம் பார்த்து வருகிறேன்! தெரியாத தொழிலில் இழந்ததை நமக்கு தெரிந்த தொழிலில் தானே எடுக்கமுடியுங்கண்ணே! அதான்..! என விவரமாக கேட்கிறார், பேசுகிறார்... 'கஞ்சா' கருப்பு! எது, எப்படியோ கவிஞருக்கும், கஞ்சா கருப்பிற்கும் ஹோட்டல் தொழில் ஒரு சேர கைகொடுத்தால் சரி!!

 


Post your comment

Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு
கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? - கஞ்சா கருப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions