உன் கிட்ட சொல்லனும்... அப்ப தைரியம் இல்லை... இப்பத்தான் வந்துச்சு.. ஐ லவ்யூ கெளதம்!

Bookmark and Share

உன் கிட்ட சொல்லனும்... அப்ப தைரியம் இல்லை... இப்பத்தான் வந்துச்சு.. ஐ லவ்யூ கெளதம்!

ஆக்‌ஷனுக்கு இணையாக காதலையும் கவிதையாக கலந்து கட்டித் தருவதில் வல்லவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என எவ்வளவு சீரியசான சப்ஜெக்டாக இருந்தாலும், அதிலும் காதல் ஒரு மெல்லிய கோடாக கூடவே பயணிக்கும். கௌதமின் ஒவ்வொரு படத்திலும், காதல் காட்சிகள் பெரிதும் பேசப்படும். அந்தவகையில், காதலை கவிதையாக காட்டும் இயக்குநர் கௌதம் மேனன் தனது சொந்த வாழ்வில் சந்தித்த காதல்கள் குறித்து வார இதழ் ஒன்றிற்கு மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத் தாண்டி வருவாயா'... இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் பேசுற பல வசனங்கள் நான் என் லைஃப்ல பார்த்த விஷயங்கள்தான். அதுல என் மனைவி ப்ரீத்தி பேசினது, அப்பா, அம்மாவைக் காதலித்த விஷயங்கள்னு எல்லாமே என்னைப் பாதித்த விஷயங்கள்.என் உறவினர்கள் படம் பார்க்கிறப்ப, 'என்னது... இதெல்லாம் நம்ம வீட்ல பேசினதாச்சே. அதை அதே ஸ்டைல்ல பயன்படுத்தியிருக்கானே'னு சொல்வாங்க. 'வி.டி.வி' படத்தில் 'ஓமணப்பெண்ணே' பாட்டு சிச்சுவேஷன், என் லைஃப்ல நடந்த விஷயம்தான்.'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபேக்குள்ள சரத், ஆண்ட்ரியா, 'உன் சிரிப்பினில்...' பாட்டு... அது என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது.

கல்யாணத்துக்கு அப்புறம் இதுக்காக மெனக்கெட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபே புக் பண்ணினேன். அதெல்லாம் படத்துல பார்க்கும்போது, 'ஐயோ... கௌதம் முன்னாடி எதுவும் பேச வேணாம். அது படத்துல வந்துடும்'னு சொல்லிட்டே இருப்பாங்க.''ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க.

நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன்.போன இடத்துல அவங்களுக்கு ஒரு கஷ்டம். அப்ப உதவிக்கு வந்த நண்பர்களில் ஒருவரின் அரவணைப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. அவரைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஷயம் எனக்குத் தெரிஞ்சதும் நொந்துட்டேன்.

அப்ப ப்ரீத்திதான், 'வருத்தப்படாத கௌதம்... நான் உனக்காக அவகிட்ட பேசிட்டு இருக்கேன்'னு சொன்னாங்க.ஒரு வருஷத்துக்கும் மேல நடந்தது அந்தச் சமாதானப் படலம். ஆனா, ஒரு கட்டத்துல அந்தக் காதல் திரும்ப ஒட்டவே ஒட்டாதுனு தெரிஞ்சது. நான் அவங்களைக் குறைசொல்ல மாட்டேன். அவங்க சூழ்நிலை அப்படி.அவங்களைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு இருந்தேன். அதுக்கு ப்ரீத்திதான் எனக்கு சப்போர்ட். ரெண்டு குடும்பங்களுக்குள்ளும் நல்ல பழக்கம்.

அதனால, ப்ரீத்தி எப்பவும் ஒரு நல்ல ஃப்ரெண்டா என்கூடவே இருப்பாங்க.அப்ப எனக்கு எந்த வேலையும் கிடையாது. அவங்க ஒரு பிரபல மருத்துவமனையில பிசியோதெரப்பிஸ்ட். அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போறது, வீட்டுல டிராப் பண்றது, சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுனு நல்ல நட்பு இருந்தது. எனக்கான செலவையும் அவங்கதான் பண்ணுவாங்க.

'குணா', 'தளபதி' படங்களுக்கு 'மன்னன்' ரஜினி - கவுண்டமணி மாதிரி அடிச்சுப் பிடிச்சு டிக்கெட் வாங்கிட்டு அவங்களைக் கூட்டிட்டுப் போயிருக்கேன். ஒரு தடவை என்.சி.சி ஹேர்கட்ல போய், 'ஆர்மியில் இருக்கேன். திஸ் இஸ் மை வொய்ஃப்'னு தியேட்டர்ல பொய் சொல்லி 'தேவர் மகன்' டிக்கெட் வாங்கிப் படம் பார்த்திருக்கோம்.அப்படி இருந்தப்ப திடீர்னு ஒருநாள், 'நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லியே ஆகணும். அந்தப் பொண்ணு உன் லைஃப்ல இல்லைனு உறுதியாகி, ரெண்டு வருஷம் ஆச்சு. அதான் இதைச் சொல்றேன். இல்லைனா, நான் சொல்லியிருக்கவே மாட்டேன். எப்போ உன்னை முதல்முறையா பார்த்தேனோ, அப்பவே 'நீதான் எனக்கு'னு தெரிஞ்சிருச்சு கௌதம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, எப்படிச் சொல்றதுனு தெரியாமலே இருந்தேன். இப்பத்தான் தைரியம் வந்துச்சு'னு ப்ரீத்தி என்னிடம் சொன்னாங்க.எனக்குப் பயங்கர ஷாக். யோசனையாவே இருந்தது. ஃப்ரெண்ட்ஷிப், ஒருதலைக் காதல்னு ஏதேதோ காம்பினேஷன்ல பழகிட்டு இருந்தேன்.

அப்போதான் நான் ராஜீவ் மேனன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்றேன். அந்த ஸ்டேஜ்ல நான் சாய்ஞ்சுக்க ஒரு தோளா எனக்கு ப்ரீத்தி இருந்தாங்க. அப்படி இப்படினு, 'எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு'னு சொல்ல, இன்னொரு ரெண்டு வருஷம் ஆச்சு.அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு இந்திப் படம் பார்த்துட்டு இருந்தோம். படம் அவங்களுக்குப் பிடிக்கலை. 'படம் ரொம்ப போர்ல. என்ன பண்ணலாம்?'னு அவங்க கேட்டப்ப, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?'னு டக்குனு கேட்டுட்டேன்.

மூணு மாசப் போராட்டத்துக்குப் பிறகுதான் ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் சொன்னாங்க. அச்சச்சோ... நான் பாட்டுக்கு இதையெல்லாம் சொல்லிட்டேன். கண்டிப்பா, வீட்ல பரேடுதான். சரி, வழக்கம்போல சமாளிச்சுக்கலாம்!இப்போ, சினிமாவுல எவ்வளவோ பிரஷர். அதையெல்லாம் சமாளிக்க வீட்ல உள்ளவங்களும் என் பார்ட்னர்ஸும் என்கூட வேலை செய்றவங்களும்தான் எனக்கான ஆதரவு.

'துருவ நட்சத்திரம்' படம் ட்ராப் ஆனதுல இருந்து ரெண்டு வருஷம் பயங்கர ப்ரஷர். ஆனாலும் அது எதுவுமே தெரியாத மாதிரி அவங்க என்னை பார்த்துக்கிட்டாங்க.15 வருஷக் குடும்ப வாழ்க்கையில், 'ஏன் என்கூட இருக்க மாட்டேங்கிற? அது எனக்குப் பிடிக்கலை'னு ப்ரீத்தி பேசி நான் கேட்டதே இல்லை. 'பட் யூ ஹேவ் டு கீப் த ரொமான்ஸ் அலைவ்'னு எனக்குத் தோணிட்டே இருக்கும்.

அதனால சினிமா பார்ட்டிகளுக்குக்கூட நான் போறதே இல்லை. அந்த நேரத்தைக் குடும்பத்தோட செலவழிக்கலாமே... அதான்.''கண்டுக்கவே மாட்டாங்க. சிரிப்பாங்க. என் பட ஹீரோயின்ஸ் எல்லாருமே என் வீட்டுக்கு வந்து பழகியிருக்காங்க... சாப்பிட்டிருக்காங்க. லைஃப்ல எல்லாத்துக்குமே ஒரு மெல்லிசான லைன் இருக்கும். நான் எப்பவும் அந்தக் கோட்டைத் தாண்ட மாட்டேன்.

''கமல்-ஸ்ரீதேவி. எனக்கு ரொமான்டிக் ஃபிலிம்னா 'வறுமையின் நிறம் சிவப்பு'தான். ப்ரீத்திக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். அந்தப் படம் டி.வி-யில எப்ப ப்ளே பண்ணாலும் முழுப் படத்தையும் பார்த்திடுவோம். அப்படி இருபது தடவைக்கும் மேல பார்த்திருக்கோம்.ஃப்ரெண்ட்ஷிப், லவ், பிரதாப் போத்தன் வர்றப்ப உள்ள பொசசிவ்னு பிரமாதமான படம். எனக்கு என்னைக்கும் கமல்-ஸ்ரீதேவிதான் எவர்க்ரீன் ஜோடி. என் பட ஜோடிகளில் பிடிச்சது சிம்பு-த்ரிஷா'' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions