எல்லாவற்றுக்கும் கமல் தான் முழு காரணம்! - கௌதமி பேட்டி!

Bookmark and Share

எல்லாவற்றுக்கும் கமல் தான் முழு காரணம்! - கௌதமி பேட்டி!

நீண்ட இடைவெளிக்கு பின்,  பாபநாசம் படம் மூலம், தன் நேர்த்தியான,  இயல்பான நடிப்பால், ராணி என்ற கதாபாத்திரத்தின் அழுத்தமான முத்திரையை ரசிகர்களின் மனதில் பதித்த கவுதமியுடன் ஒரு சந்திப்பு.

மீண்டும் நடிக்க வந்ததற்கு ரசிகர்களின் வரவேற்பு பற்றி...?

நான் எதிர்பார்த்தது என்று சொல்ல முடியாது. ரசிகர்களிடம் எனக்கு எப்போதும், ஒரு நம்பிக்கை உள்ளது. ஏராளமான ஆண்டுகளுக்கு பின் நடிக்க வந்துள்ளேன். ஆனால், தமிழக மக்கள் இவ்வளவு அன்பு, ஆதரவு,  வரவேற்பு கொடுத்துள்ளனர். 

அதனால், தொடர்ந்து நடிக்க, எனக்கு ஆர்வம் தந்துள்ளது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களிலும் சுற்றிவிட்டு, எங்கெங்கோ பயணப்பட்டு, கடைசியா மறுபடியும் என் வீட்டுக்கு வந்த உணர்வு. எனக்கு, மனதில் இடம் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என, ஒரு சில வார்த்தை யால் முடிக்க  முடியாது. மிகவும் சந்தோஷமா இருக்கேன். 

நெல்லை பாஷையை சுலபமாக பேசி விட்டீர்களா?

நான் நடித்தது, 120 படங்கள் என, நினைக்கிறேன். அதில் இருவர், பாபநாசம் என்ற, இரண்டு படங்களுக்கு மட்டுமே, சொந்த குரலில் பேசியிருக்கேன். எனக்கு இந்த மொழி மிகவும் சவாலாக இருந்தது. 

படப்பிடிப்பில் கொஞ்சம் பயிற்சி, எப்போதும் நான் பேசும்போது, உச்சரிப்பு சரியா இருக்க ஆசைப்படுவேன். வெளிநாட்டுக்காரர்கள், எப்படி நம்ப மொழி பேசும்போது இருப்பார்களோ, அதேபோல், இருக்கக் கூடாது என, நினைத்தேன். பேசினால் சரியா பேச வேண்டும்; இல்லாவிடில் பேசவே கூடாது.

ஆனால், பாபநாசத்தில் நான் பேசியதற்கு, பாஸ் மார்க் கிடைத்தது என, நினைக்கிறேன். 

நீங்க இந்தப் படத்தில் நடிக்க காரணம், கமலா அல்லது இயக்குனரா?

இயக்குனர் நான் நடிக்க வேண்டும் என்று முதலில் மனசுக்குள் நினைத்திருக்கிறார். ஆனால், நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய  காரணம், கமல்  தான்.  கதைக்கு என்ன வேண்டும்; அந்த கதாபாத்திரம் என்ன; அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்;

இதெல்லாம் மீறி இயக்குனர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை எல்லாம், கமல் யோசிப்பார். என்னிடம், இந்த படத்தில் நடிக்கிறீர்களா என, கேட்டார்.

அவரிடம் நான், ஏதேனும் கட்டாயத்திற்காக கேட்கிறீர்களா; இந்த கதாபாத்திரத்திற்காக கேட்கிறீர்களா; இல்லை, இந்த கதாபாத்திரத்தை  நான் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து கேட்கிறீர்களா என, கேட்டேன்.  ;இந்த கதாபாத்திரம் நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என, கேட்கிறேன் என்றார்.  

அதன்பின், நான் நடிப்பது பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. சரி என, சொல்லி விட்டேன்; படத்தின் கதாபாத்திரமான, ராணி யாக மாறி விட்டேன்.  

படத்தில் கமலுக்கும், உங்களுக்கும் ஒத்துழைப்பு  அருமையாக வந்துள்ளதே?

எங்கள் ஒத்துழைப்பு  பற்றி, அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து பேசிக் கொண்டு தான் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் கமல் தான். இவர், இந்த காட்சியில் வரவேண்டும்; இங்கே நிற்க வேண்டும்; இந்த வசனம் பேச வேண்டும்;  திரையில்  இவர்  முன்னால் வரவேண்டும் என, மிகவும் ஆதரவாக இருப்பார்.

அவர், தன் கதாபாத்திரம் மட்டும் தான் முக்கியம் என, நினைக்க மாட்டார். சிறிய கதாபாத்திரங்களில் வருபவர்கள்  கூட, அழகாக தெரிய வேண்டும் என, ஆசைப்படுவார். இன்று  நானும் பேசப்படுகிறேன் என்றால், அதற்கு அவர் தான் முழு காரணம். 

நடுத்தர குடும்பத்து தலைவியா, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த அனுபவம்?

இயக்குனரின் சரியான திட்டமிடுதலால் படத்தை, 39 நாளில் எடுத்து முடித்தார். ராணி கதாபாத்திரத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக என்னை தயார் படுத்தினார். ஒரு கதாபாத்திரம்  என்னவோ அதைப் புரிந்து, படப்பிடிப்பின் போது என்ன வருமோ அதை செய்வது தான் என் வழக்கம்.

ஒரு குடும்ப தலைவி, இரண்டு குழந்தைகளுக்கு தாய் எப்படி அலட்டிக் கொள்ளாமல், இயல்பா ஒரு கதாபாத்திரத்தில் வர வேண்டுமோ, அப்படி தான் நான் அதை செய்தேன்; இது, ஒரு 'டீம் ஒர்க்.' எல்லாரும் அவர்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் என, கூறுவேன். 

கமலுடன் ஏற்கனவே, நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளீர்கள். இப்போது என்ன வித்தியாசம் தெரிகிறது?

எனக்கு முழுவதும் ஆதரவாக இருந்தார். எனக்கு கிடைத்த இந்த கதாபாத்திரத்தில் நல்லபடியாக செய்ததாக நம்பிக்கை வந்துள்ளது. அந்த அளவுக்கு வயசும், ஒரு முதிர்ச்சியும்  கிடைத்துள்ளது.

ஒரு கட்டத்திற்கு மேல் போனால், சில கதாபாத்திரங்களில்  நடிக்க, வாழ்க்கையின் அனுபவம் தேவை. அது, இப்போது எனக்கு கிடைத்து உள்ளது. இதற்கு முன், நான் மன பதற்றத்துடன், உணர்ச்சி வசத்துடன், அப்பாவியாக இருந்தேன். 

சின்ன குழந்தைகள் போல், எந்த அனுபவமும் இல்லாமல் இருந்தேன். இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு நடித்துள்ளேன். ஆனால், இப்போது என்னால், எந்த கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிக்க முடியும். அந்த அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது என, சொல்வேன்.
உங்க மகள் பற்றி? 
மகள் சுப்புலட்சுமி இப்போது, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படிக்கிறார். பிளஸ் 2 முடித்து, அவர் எடுக்கும் முடிவு என்னவோ, அதுவே என்னுடையதும். 

தொடர்ந்து இனி நடிப்பீர்களா?

நிச்சயமா நடிப்பேன்; மிகவும் ஆசையும் கூட. ஒருமுறை நடித்து பார்த்ததில், மக்கள் வெற்றி பாதைக்கு அழைத்து சென்று விட்டனர். நான் எதிர்பார்த்ததை விட, அதிகமான பெயர் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன்.  இனி, நல்ல கதாபாத்திரங்களில், கண்டிப்பாக நடிப்பேன். இவ்வாறு, கவுதமி கூறினார்.


Post your comment





Related News
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
18 வருடம் கழித்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் கௌதமி!
நல்ல நடிகையை வீட்டில் அடைத்து விட்டேன்: கமல்ஹாசன் வருத்தம்
என்றும் நான் கமல் ரசிகை: கவுதமி
கவுதமி மகள் கதாநாயகியாக நடிப்பாரா?
2014 பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவிற்கு வந்த மயிலு... ஜோதிகா... கவுதமி
கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாள் கோயில் பக்தர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions