
சிம்புவிற்கு இனி வரும் மாதங்கள் சோதனை மாதங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 'போடா போடி' படத்திற்குப் பிறகு படங்களே வெளியாகாமல் இருந்த சிம்புவிற்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
முதலில் மார்ச் மாதம் 27ம் தேதி 'வாலு' படமும், அடுத்து ஏப்ரல் மாதம் 'இது நம்ம ஆளு' படமும், அதற்கடுத்த சில மாதங்களில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படமும் வெளியாக உள்ளது.
இவற்றில் 'வாலு' படத்தில் ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் இருப்பதால் கண்டிப்பாக ஒரு கலகலப்பான காதல் படத்தை ரசிகர்கள் ரசிக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் நிஜ காதலர்களாக இருந்து பிரிந்து மீண்டும் திரைப்படத்தில் மட்டுமே காதலர்களாக இணைந்துள்ள சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ள 'இது நம்ம ஆளு' படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் டீசர் ஒன்று பொங்கலுக்கும், ப்ளூப்பர்ஸ் ஒன்று காதலர் தினத்தன்றும் வெளியானது. இரண்டுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை டீசரை 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், ப்ளூப்பர்ஸ் வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்துள்ளனர். சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைக்கும் முதல் படமான 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல்கள் மீது நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்துள்ளார்.
Post your comment