ஜல்லிக்கட்டை காப்பாற்ற எதையும் சந்திக்க தயார் : இளமி இயக்குனர் ஆவேசம்

Bookmark and Share

ஜல்லிக்கட்டை காப்பாற்ற எதையும் சந்திக்க தயார் : இளமி இயக்குனர் ஆவேசம்

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. இத்திரைப்படத்தில் யுவன், அனுகிருஷ்ணா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். வில்லனாக ‘கல்லூரி’ அகில், கிஷோர்,  ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூலியன் பிரகாஷ். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் ‘இளமி’ பற்றி இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் பேசும்போது, 18-ம் நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் ஜல்லிக்கட்டு மையக்கருவாக உள்ளது. அந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த வடம் ஜல்லிக்கட்டு இன்று அடியோடு அழிந்து விட்டது. ஜல்லிக்கட்டில் பல வகைகள் இருந்தாலும் வடம் ஜல்லிக்கட்டு என்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு. 

முற்றிலும் அழிந்து போன இக்கலையை நாங்கள் திரையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம். இதன் மூலமாக இப்பொழுது தடை செய்யப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஒரு விடிவு பிறக்கும் என ஆணித்தரமாக நம்புகிறோம். இத்திரைப்படத்தை பார்க்கும் போது, 18 ம் நூற்றாண்டில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் ஜல்லிக்கட்டு காளையை தம் பிள்ளைகள் போல் நினைத்து பண்டுதம் பார்த்து, மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்நாள் எல்லாம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்து ஜீவ காருண்யம் பேணி வந்தார்கள்.

அப்படி வளர்க்கப்பட்ட காளைகள் இன்று அடி மாடுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர  விளையாட்டு அது முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை அடி மாடுகளுக்காக வலுக்கட்டாயமாக ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாடு பிடி வீரர்கள் வேதனையில் மருகிக்கொண்டிருக்கின்றனர்.  

இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் மாடுபிடி வீரர்களே இல்லாமல் போய் விடுவார்கள். ஜல்லிக்கட்டு என்ற கலை முற்றிலுமாக அழிந்து போய்விடும் நம் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேரான ஜல்லிக்கட்டு கலையை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்..?  

நிறைய இழந்து ஜல்லிக்கட்டு கலையை காப்பாற்ற வேண்டும் என்று ‘இளமி’ திரைப்படத்தை எடுத்திருக்கிறேன். இந்த கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். என்று ஆவேசம் காட்டினார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். 

மேலும் அவர் கூறும்போது, ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஐந்து பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. அதில் தீப்பறக்க  முட்டிப்பாரு.. திமிலை நீயும் தொட்டுப்பாரு... என்று ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடலாசிரியர் ராஜாகுருசாமியின் வரிகளுக்கு ஆந்தக்குடி இளையராஜா பாடி இருக்கிறார். இது ஜல்லிக்கட்டின் தேசிய கீதமாக தமிழகமெங்கும் ஒலிக்கும் என்றார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions