நோ பிரஸ் மீட்ஸ், ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு... ஜல்லிக்கட்டுக்காக ஸ்தம்பித்தது திரையுலகம்!

Bookmark and Share

நோ பிரஸ் மீட்ஸ், ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு... ஜல்லிக்கட்டுக்காக ஸ்தம்பித்தது திரையுலகம்!

சமூகப் பிரச்சினை, தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் எழும்போது, தங்கள் ஆதரவைத் தெரிவிக்க ஒருபோதும் தமிழ் சினிமா தயங்கியதில்லை. ஈழத் தமிழர் ஆதரவு, காவிரிப் பிரச்சினை, மூவர் தூக்கு பிரச்சினை என பல விஷயங்களில் தாங்களும் முன்வந்து போராட்டங்களை நடத்தியுள்ளன திரையுலக அமைப்புகள்.

விளம்பரத்துக்காக சினிமாக்காரர்கள் இப்படிச் செய்வதாக சிலர் கூறினாலும், தமிழ் சினிமா தன் கடமையை ஆற்றத் தவறியதில்லை.

ஆனால் முந்தைய போராட்டங்களுக்கும், இந்த முறை ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் போராட்டங்களுக்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உள்ளது.

நடிகர் சங்க உண்ணாவிரதம் தவிர்த்துப் பார்த்தால், கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு வழிகளில் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தமிழ்த் திரையுலகம் காட்டி வருகிறது. ஜல்லிக்கட்டு வேண்டும்... அந்தத் தடை நீங்க வேண்டும்... தமிழ் மக்கள் தங்கள் பாரம்பர்யத்தைத் தொடர வேண்டும் என்ற முழுமையான உணர்வு மேலோங்க பல போராட்டங்களில் தொடர்ச்சியாக அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்புகளை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தவிர்த்துவிட்டனர். முதல் தோற்ற வெளியீடு, இசை வெளியீடு, பட வெளியீடு என பல நிகழ்ச்சிகளை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலேயே தன்னிச்சையாக ரத்து செய்துவிட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களின் நிகழ்ச்சிகள் இப்படி ரத்தாகியுள்ளன.நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை, சற்று தாமதமான போராட்டம்தான் என்றாலும், ஜல்லிக்கட்டுக்கான தார்மீக ஆதரவைத் தரும் ஒரு வடிவமாக இந்த உண்ணாவிரதம் அமைந்துள்ளது.

இந்த உண்ணாவிரதம் மூலம் மாணவர்களின் போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுமோ என்ற சந்தேகம் எழுந்ததால், ரஜினி, அஜீத் போன்ற முக்கிய நடிகர்கள் வந்தும்கூட, அந்த நிகழ்ச்சிக்கு மீடியா கவரேஜ் வேண்டாம் என்று கூறிவிட்டது நடிகர் சங்கம்.

மொத்த மக்களின் உணர்வுகளோடு நாங்களும் கலக்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டது நடிகர் சங்கம். எனவே திரையுலகம் முதல் முறையாக மக்களோடு மக்களாக எந்த தனி ஒளிவட்டமும் இல்லாமல் நடத்தியுள்ளது ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை!


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions