மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா

Bookmark and Share

மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா

ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசியதாவது:

எனது மூத்த சகோதரி மனோரமா, இயற்கை எய்திவிட்டார் என்று அறிந்ததும், எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. திரைப்படத் துறையில் அவர் எனது மூத்த சகோதரி ஆவார்.

ஏராளமான திரைப்படங்களில் அவரும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். அவர் என்னை அன்பாக 'அம்மு' என்றுதான் அழைப்பார். நான் அவரை எப்பொழுதுமே மனோரமா என்றுதான் அழைப்பேன்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எத்தனையோ முறை அவரது இல்லத்திற்கு நான் சென்றிருக்கிறேன். "சாப்பிடுறியா அம்மு" என்று கேட்பார். "சரி" என்பேன். அவரது கையாலேயே எனக்கு உணவு பரிமாறுவார். அதைப் போலவே பலமுறை அவர் எனது இல்லத்திற்கு வந்திருக்கிறார். என்னுடன் அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறார். அந்த நாட்களை மறக்க முடியாது. எனக்கும் மனோரமாவுக்கும் இருந்த ஒரு பந்தத்தை என்றைக்கும் யாராலும் பிரிக்க முடியாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு, சகோதரி மனோரமா மீது ஒரு அலாதி பிரியம் எப்போதும் உண்டு. அதைப்போலவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னிடம் அவரைப்பற்றிப் பேசும் போது, "நடிப்பில் மனோரமா ஒரு ஜீனியஸ்" என்று பலமுறை கூறியிருக்கிறார். உண்மையிலேயே மனோரமா நடிப்பில் ஒரு மேதை தான். நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் போல், அவர் ஒரு 'நடிகையர் திலகம்' அல்லது 'பெண் நடிகர் திலகம்' என்றே சொல்லலாம்.

மனோரமாவைப் போல், ஒரு சாதனையாளர் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் களைப்பாற வேண்டும். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions