ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சைகள் என்ன..? முதல் முறையாக பதிலளித்த சசிகலா

Bookmark and Share

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சைகள் என்ன..? முதல் முறையாக பதிலளித்த சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தகவல் தெரிவித்து பேசினார். ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டு சசிகலா இப்பதவிக்கு வந்துள்ளார். இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதல் முறையாக சசிகலா உரையாற்றினார். அது, டிவி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்து அவர் பேசியதாவது:நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று.. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது.

தலையில் இடி வந்து விழுந்ததை போல, நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்து விட்டார். தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், தனது மரணத்தின் மூலம், நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.நம் அம்மாவுக்கு, இந்திய இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை (கண் கலங்குகிறார்). ஆனால் இறைவன், தன் அன்பு மகளை, தன்னிடம் அழைத்துக் கொண்டார். 75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்.

நம் அம்மாவை மீட்டுவிட வேண்டும் என்ற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களின் ஆன்மீக வழிபாடுகளும் ஒன்று சேர, அவை நம் அம்மாவை காப்பாற்றிவிடும் என உறுதியாக நம்பினேன்.

அதி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனியறைக்கு வரும் அளவுக்கு, அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும், தலை சிறந்த சிகிச்சைகளை மேற்கொண்டோம்.

லண்டன் மருத்துவர்களை தொடர்ந்து, சிங்கப்பூர் மருத்துவர்களின் பிசியோ தெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது.இன்னும் சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழு மதியாக, போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்துவிடுவேன் என்று நம்பியிருந்த நேரத்தில், அம்மாவின் இதய துடிப்பை நிறுத்தி, 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடமிருந்து இறைவன் பறித்துக் கொண்டான்.

இன்று நாட்டு அரசியலையே தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய, தேவதையில்லாத அரசியல் மாடம் களையிளந்து நிற்கிறது. எனக்கோ அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை. சில நிமிடங்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள், சில வினாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்களே அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்கள் அம்மாவிடம் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு, எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது (கண்ணீர்).


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions