என்னை நம்பாத நண்பன் சமுத்திரக்கனி - 'காவல்' இயக்குனர்

Bookmark and Share

என்னை நம்பாத நண்பன் சமுத்திரக்கனி - 'காவல்' இயக்குனர்

விமல், புன்னகைப் பூ கீதா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள 'காவல்' படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குனர் சுசிகணேசனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த நாகேந்திரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கு முதலில் 'நீயெல்லாம் நல்லா வருவடா' எனப் பெயர் வைத்திருந்தனர். படத்தைப் பார்த்த பல சீனியர் இயக்குனர்களும், சில காவல் துறை அதிகாரிகளும் பார்த்து படத்திற்கு வேறு பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னதால் படத்தின் பெயரை மாற்றிவிட்டோம் என்று இயக்குனர் நாகேந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் படம் இயக்கப் போகிறேன் என்று சொன்னதுமே என்னுடைய நண்பர்கள் பலரும் அதை நம்பவேயில்லை. குறிப்பாக எனது நெருங்கிய நண்பன் சமுத்திரக்கனியிடம் போய் படம் இயக்கப் போவதைப் பற்றிச் சொன்னேன்.

அவனோ, அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் என்ன சாப்பிடற என்றுதான் கேட்டான். படத்தில் நீ ஒரு கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று சொன்னேன், அதையும் அவன் கிண்டலடித்தான்.

அதன் பின் ஒரு நாள் சென்று படத்தின் கதையைச் சொன்னேன். அதோடு, “மதுரையில நட்புக்காக கொலை பண்றாங்க, திருச்சியில ரவுடியிசத்துக்காக கொலை பண்றாங்க, திருநெல்வேலி, தூத்துக்குடில சாதிக்காக கொலை பண்றாங்க, விழுப்புரம், கடலூர்ல அரசியலுக்காக கொலை பண்றாங்க, ஆனா, சென்னையில மட்டும்தான் பணத்துக்காக கொலை பண்றாங்க”ன்னு இந்தப் படத்தைப் பத்தி சுருக்கமா சொன்னேன்.

அதைக் கேட்டதும் சமுத்திரக்கனி, எப்படா ஷுட்டிங் போலாம்னு உடனே நடிக்க சம்மதிச்சான். இந்தப் படத்தை நான் எடுக்கும் போது எனக்கு ரொம்பவே உறுதுணையா இருந்தான்.

ஆனால், முதல்ல என்னை நம்பாத நண்பனும் அவன்தான்,” என நண்பனைப் பற்றிப் 'பெருமையாகப்' பேசினார் நாகேந்திரன். இந்தப் படத்திற்காக அவர் ஆராய்ச்சி செய்துதான் படத்தின் கதையையே உருவாக்கினார் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions