மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!

Bookmark and Share

மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!

கலை உலகை தன் நடிப்பால் ஆட்சி செய்த ‘ஆச்சி’ மனோரமா நேற்று முன்தினம் இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், மறைந்த மனோரமாவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். அதில், “ஒன்பது நாட்களுக்கு முன்னர், மூத்த பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் ஒரு விழா. உணர்ச்சிப்பூர்வமான அந்த விழா அரங்கத்தில் உடல் நலம் இல்லாத போதிலும் அறிவிப்பின்றி மூச்சிறைக்க வந்து நின்ற மனோரமா, சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“உங்களையெல்லாம் பார்க்கத்தான் வந்தேன்” என்றார். அவர் நெற்றியில் முத்தமிட்டு கட்டியணைத்தேன். அது கடைசி அரவணைப்பு என்று எனக்கு அன்று தெரியாது. விழாவில் பேசிய மனோரமா உங்கள் எல்லோருக்கும் ரெண்டு கதை சொல்லப் போறேன். 

ஒன்று சோகம், இன்னொன்று காமெடி என்று தொடங்கி, கலைஞர் கருணாநிதி 65-70 வருடங்களுக்கு முன்னாள் எழுதிய கவிதை நாடகம் ஒன்றை ஏற்ற, இறக்கங்களுடன் குறிப்புகள் எதுவும் இன்றி அமர்ந்தபடி நடித்துக் காட்டினார். குறைந்தது 5, 6 பக்கங்கள் நீளும் நற்றமிழ் வசனங்கள். 

அடுத்து காமெடி என்று சென்னை தமிழில் சிறுகதை ஒன்றை சொல்லி மகிழ்வித்தார். குலுங்கி சிரித்த அரங்கம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அப்போது ஆச்சி மனோரமா, என் பக்கம் திரும்பி நல்லா இருந்ததா? என்று கண்ணால் கேட்டார். என் நிறைந்த கண்கள் அந்த கேள்விக்கு பதில் சொல்லியிருக்கும் என நான் நம்புகிறேன். 

“போதும், உங்கள் எல்லோருக்கும் முன்னால், என் பிள்ளைக்கு முன்னால் என்னால முடிஞ்சதை செஞ்சி காட்டிட்டேன். இன்னைக்கு ராத்திரியே நான் செத்தாலும் பரவாயில்லை” என்றார். எல்லோரும் உரிமையுடன் மனோரமாவை கடிந்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்று புத்திமதி சொன்னார்கள், என்னைத் தவிர. 

இளம் வயது முதல், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஓயாது இயங்கி வந்த கலைத் தென்றல் மனோரமா. உடலின் வற்புறுத்தலால், ஓய்வுற்ற சோகம் அவரை வாட்டியது புரிந்தது, எனக்கு. 

ஆள்கூட்டம் ஆர்ப்பரிப்பு இல்லாமல் ஓய்ந்து கிடக்க எங்கள் மனோரமா வெறும் கிழவி இல்லையே. என் நகைச்சுவை நடிப்பின் தாய், தந்தையர் என்று மனோரமாவையும் நாகேஷையும் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. 
என் மகள் ஸ்ருதி குழந்தையாய் இருக்கையில் கிராமத்து பாணியில் முகத்துக்கு திருஷ்டி கழித்து, நெற்றிப் பொட்டில் புறங்கையை முடக்கி சொடக்கிடும் வித்தையை, என் வீட்டு திண்ணையில் அமர்ந்து கற்றுத்தந்த அந்த காட்சி இன்றும் என் மனத்திரையில் நிழலாடுகிறது. 

சமீபத்தில் மனோரமாவை சந்தித்த ஸ்ருதி, அவருக்கு திருஷ்டி கழித்து சொடக்கியிருக்கிறார். கண் நிறைந்த மனோரமா “எனக்கு திருஷ்டி கழிக்க யாருமே இல்லை. ராசாத்தி நீதான் இருக்கே” என்றாராம். 

கண்ணீருக்கு நடுவே, தம்மையும் அறியாமல் மனோரமா நமக்கென்று படைத்துச் சென்ற நகைச்சுவை விருந்தை எண்ணி ஊர்வலத்தார் புன்னகைப்பர். அது மரணத்தை பார்த்து எங்கள் மனோரமா உதிர்த்த புன்னகை, அது உங்கள் வாயில் மலரப்போகிறது என்று நான் கொள்கிறேன். வணக்கம் அம்மா... வணக்கம். இவ்வாறு அந்த புகழாரத்தில் தெரிவித்தார்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions