சட்டசபை தேர்தலில் ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி ஓட்டுப்போடலாம்: நடிகர் கமல் பேட்டி

Bookmark and Share

சட்டசபை தேர்தலில் ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி ஓட்டுப்போடலாம்: நடிகர் கமல் பேட்டி

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கான தொடக்க விழா பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது.

பிரத்யேக அரங்குகள் அமைத்து இந்த விழாவை நடத்தினர். இதில் இளையராஜா கலந்து கொண்டு படத்தின் தலைப்பை அறிவித்தார்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘நடிகர் சங்க வளாகத்துக்குள் கமல்ஹாசன் மங்களகரமான அவரது திரைப்பட தொடக்க விழாவை நடத்தி உள்ளார். இந்த விழாவை நடத்துவதற்காக ரூ.2.5 லட்சத்தையும் வாடகையாக செலுத்தி இருக்கிறார்’’ என்றார்.

தொடர்ந்து கமல்ஹாசன் பேசும்போது, ‘‘நடிகர் சங்க வளாகத்தில் பட விழாவை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் விளம்பரங்களில் மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு.

அந்த வாசகம் மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.’’

விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். விஷால், கார்த்தி, பொன்வண்ணன், பிரபு, நடிகை சுருதிஹாசன், அக்ஷராஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘நகைச்சுவை, திகில் கதையம்சம் உள்ள படமாக சபாஷ் நாயுடு தயாராகிறது. இந்த படத்தின் கதையை நானே எழுதி உள்ளேன். நான் படித்த விஷயங்கள், பார்த்த மனிதர்களின் பாதிப்புகள் கதையில் இருக்கும்.

ராஜீவ் குமார் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவர் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இதில் எனது ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சுருதிஹாசன் எனது மகளாகவே நடிக்கிறார்.

எனது இன்னொரு மகளான அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். மே 16-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கும். நான் தசாவதாரம் படத்தில் நடித்த பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சாதிக்கு எதிரான நீங்கள் படத்துக்கு சாதி பெயர் வைத்து இருக்கிறீர்களே?

பதில்: என் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லை. எனது குழந்தைகள் பெயரிலும் சாதி இல்லை. ஆனால் பலர் தங்கள் பெயரில் சாதியை சேர்த்துள்ளனர். தெரு, சாலைகளிலும் சாதி பெயர்கள் உள்ளன. மது விலக்கு பற்றி பேச மது பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் எதற்காக இந்த பெயரை வைத்து இருக்கிறேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ரசிகர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: எனது ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போடலாம். அரசியல் என்பது பாதுகாப்புக்கு போட்டுக்கொள்ளும் செருப்பு மாதிரி. அதை நற்பணிக்கு வரும்போது வெளியே கழற்றி விட்டு வரவேண்டும் என்று எனது ரசிகர்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஓட்டு போடுவீர்களா?

பதில்: கடந்த தேர்தலில் எனக்கு ஓட்டு இல்லை என்று மறுக்கப்பட்டது. ஆனாலும் ஓட்டு உரிமை கேட்டு மனு செய்வது எனது ஜனநாயக கடமை. எனது வெளிநாடு பயணத்திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் இருந்தால் ஓட்டுப்போடுவேன்.

கேள்வி: நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் நீங்களும் ரஜினிகாந்தும் பங்கேற்கிறீர்கள். ஆனால் விஜய், அஜித்குமார் வருவதில்லையே? அவர்களுக்கு அறிவுரை சொல்வீர்களா?

பதில்: நான் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன். அறிவுரையை கேட்கவும் மாட்டேன். விஜய், அஜித் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுபற்றி பேசி அரசியலாக்க விரும்பவில்லை. இருவரும் எனக்கு சகோதரர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நடிகர் சங்கத்தின் கதவுகள் திறந்தே இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Post your comment

Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions