நான் சுத்த அசைவம் - கமல் பேட்டி!

Bookmark and Share

நான் சுத்த அசைவம் - கமல் பேட்டி!

உத்தம வில்லன் படம் பிரச்னை, விஸ்வரூபம் - 2 எப்போது ரிலீசாகும் என்பது தெரியாத நிலை, தூங்காவனம் என்ற புதுப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நடுவே, நடிகர் கமல்ஹாசன் நடித்த, பாபநாசம் படம், இன்று வெளியாகிறது. இதற்காக, அவர் அளித்த சிறப்பு பேட்டி: 

பாபநாசம் கதையை ஒரு வரியில் சொல்ல முடியுமா?

தலைப்பே சொல்கிறது, பாவம், நாசம் என்ற இரண்டுமே இருக்கிறது. அதை எப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். செய்த பாவத்தை நாசம் செய்வதா; பாவம், நாசம் இரண்டையுமே விளைவிப்பதோ; செய்த பாவத்தை கழித்து கொள்வதா என, சொல்லலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, பாபநாசம் படத்தில், வேட்டி கட்டி, ஒரு நடுத்தர குடும்ப தலைவன் கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி?'

எனக்கு, இது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை. என் குடும்பத்து தலைமை பொறுப்புகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. எங்கள் குடும்பம், ஜனநாயகமான குடும்பம்; நான் தான் தலைவன் என, நினைப்பதில்லை.

நான் தலைவனும் கூட, தொண்டனும் கூட; இரண்டுமே நான் தான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரசியல் தலைமை மாறுகிறது. அதுபோல், அந்தந்த விஷயங்களை நிர்ணயம் செய்யும்போது, தலைமை பொறுப்பை, விஷயம் தெரிந்தவர்கள் கையில் மாற்றிக் கொடுக்க வேண்டியுள்ளது. சமையல் என்று வரும்போது, அதைக் கொடுப்பவர்கள் கையில் தான் கொடுக்க வேண்டும்; சாப்பிடுபவர்கள் அதை முடிவு செய்யக்கூடாது.

நெல்லை மொழி பேசியது, பழக்கமா அல்லது பயிற்சியா?

இப்ப தான் பழக்கமாகி உள்ளது. அதற்கு நல்ல வாத்தியார்கள் மட்டுமின்றி, நண்பர்களே வாத்தியாராக அவதாரம் எடுத்து உதவி செய்தனர்.

பாபநாசம் படத்தில், இரண்டு குழந்தைகள் உங்களோடு நடித்துள்ளனர். அப்போது, உங்க குழந்தைகள், ஸ்ருதி, அக்ஷரா எந்த அளவு உங்களை நினைவுபடுத்தினாங்க?

குழந்தைகளை பார்த்தால் மட்டும் இல்லை, கிழவிகளை பார்த்தால் கூட எனக்கு ஸ்ருதி, அக்ஷரா நினைவு வருவதுண்டு. இன்னும், 50 வருஷம் கழித்து என் ஸ்ருதி இப்படி ஆகிவிடும் என நினைப்பது உண்டு.

ஸ்ருதி சாயலில், ஒரு கிழவியை பார்த்தாலும் சரி, அக்ஷரா சாயலில், ஒரு கிழவியை பார்த்தாலும் சரி, இவங்க ஞாபகம் வரும். இன்னொருவர் கையில் இருக்கும் குழந்தையை பார்க்கும்போது, என்னையே ஞாபகம் வரும். இன்னைக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறேனே, இந்த மாதிரி உட்கார்ந்த ஆளு தானே நான்... இன்றைக்கு என்ன மாதிரி பேசுகிறான் என்று என்ணை நானே வியந்து கொள்வேன். கண்டிப்பா எனக்கு, என் மகள்கள் நினைவில் வந்து போவார்கள்.

பாபநாசம் படத்தில், அடித்து நொறுக்கும் சண்டை காட்சி இல்லை; வழக்கமான பாடல் காட்சி இல்லை; ஒரு குடும்ப சித்திரமா வந்திருக்கும் படம், ரசிகர்களுக்கு எந்த வகையில் ஸ்பெஷல்?

மூன்று மொழிகளில் இந்த படத்தை வரவேற்று உள்ளனர். அங்கேயும் சண்டை பிரியர்கள் உள்ளனர். ஆனாலும், இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்றதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

அடுத்து எப்போது ஒரு கமர்ஷியல் படத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்?

விஸ்வரூபம் அது தானே? ஒன்று கூற கடமைபட்டுள்ளேன். எம்.ஜி.ஆர்., நடித்த, இதயவீணை படமும், சிவாஜி நடித்த, திரிசூலம் படமும், ஓடிக்கொண்டு இருந்த நேரத்தில் தான், அவள் ஒரு தொடர்கதை படம் வந்தது. யார் யார் நடிக்கின்றனர்; அவர்கள் பெயர் கூட தெரியாது.

ஜேசுதாஸ் பாடிய ஒரு பாட்டு தான் தெரியும்; பாலச்சந்தர் பெயர் தெரியும்; எம்.எஸ்.வி., இசை, கண்ணதாசன் எழுதி உள்ளார் என, தெரியும். கருப்பு வெள்ளையில் வந்த படம். பரமக்குடியில், இரண்டு வாரம் ஓடிய கமல்ஹாசனின், முதல் படமாக இந்த படம் அமைந்தது. பரவாயில்லை, நம்ம புள்ள படம், இரண்டு வாரம் ஓடி விட்டது என்ற பாராட்டை பெற்ற படமாக அமைந்தது. எனவே, தழல் வீரத்தில், குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை.

தமிழ் சினிமாவில், இப்போது நிறைய புதுமைகள் நடப்பதாக தெரிகிறதே?

புதுசு, புதியதும் அல்ல; நாங்கள், உணர்ச்சிகள் என்ற படம் எடுக்கும்போது, என்னப்பா இப்படி ஒரு படமா என, கிண்டல் அடித்தவர்கள் இருக்காங்க; அதை வரவேற்றவர்களும் இருக்காங்க. பத்திரிகையாளர்கள்கிட்ட, ஒரு நியூஸ் போடுங்க என்று சொல்லி, போட்டோ போட மாட்டாங்களா என, ஏங்கிகிட்டு இருந்தோம். ஏன் என்றால், எம்.ஜி.ஆர்., சிவாஜி கோலோச்சிய காலத்தில், இந்த படத்தை யார் போடுவாங்க என நினைத்தபோது, எனக்கு எல்லாம் பத்திரிகைகாரர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த புதுமைகள் நடந்து கொண்டே இருக்கும்; நடந்தாக வேண்டும்.

இளமையா இருக்கீங்க... என்ன சாப்பிடுறீங்க... எப்படி உடம்பை பராமரிக்கிறீர்கள் என்பதை சொல்லுங்க?

எனக்கு தெரிந்து, என் பெற்றோர் சொன்ன விஷயங்களை நான் பின்பற்றவில்லை. என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கால்வாசி பேர் சுத்த சைவம். நான், மூன்று வயதில் இருந்தே அசைவம் ஆரம்பித்து விட்டேன்.

சொல்லப்போனால், நாராயணசாமி நாயனார் என்று என் வீட்டுக்கு வேண்டியவர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில், ஒன்றரை வயதிலேயே துவங்கி விட்டதாக, அரை நினைவு.

எனவே, நான் சுத்த அசைவம். எதையும் மிதமாக செய்ய வேண்டும். சில கெட்ட பழக்கங்களை முன்கூட்டியே உதறி தள்ளுவது கெட்டிக்காரத்தனம். எல்லாரும் பாக்கு போடுறாங்களே, வாசனையா இருக்கு என, போட்டு பார்த்தேன் வேண்டாம் என நிறுத்திட்டேன். சிவாஜி, ஸ்டைலா சிகரெட் பிடிக்கிறார் என நானும் பிடித்து பார்த்தேன்; அது சரியா வரவில்லை.

நான் டான்சர், கொஞ்சம் பாடுவேன். இருமிட்டு இருமிட்டு பாட முடியாது என்பதால் புகைபிடிக்கிறதை ரயில்கிட்ட விட்டுட்டேன். பச்சரிசி சாப்பிடுவதை விட்டுட்டேன். இன்னிக்கு வரை பச்சரிசி சோறு பிடிக்காது. ஒருவேளை கேரளாவில் இருந்ததால் அந்த உணவும் பிடிக்கும். இப்படி எல்லாம் சாப்பிடுறேன்; கொஞ்சமா சாப்பிடுகிறேன்; அவ்வளவு தான்.

நீங்கள் கற்க வேண்டிய விஷயங்கள் ஏதும் இருக்கா?

அய்யோ... அது நிறைய இருக்கு. பட்டியல் போட்டால், நேரம் பத்தாது. பத்திரிகைகாரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது உட்பட, நான் நிறைய கற்க வேண்டியது உள்ளது. ஒவ்வொரு படமும், ஒவ்வொரு பேட்டியும், ஒவ்வொரு நட்பும், ஒவ்வொரு விரோதமும், எனக்கு புதுப்புது பாடங்களை கற்று கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன.

உங்க சமீபத்திய படங்களில், பூஜாகுமார், ஆண்ட்ரியா தொடர்ந்து நடிக்கின்றனரே?

பாலச்சந்தர், 39 படங்களில் எப்படி என்னை நடிக்க வைத்தாரோ, அதைப் போலத் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. சுஜாதாவுடன் அப்போது, இரண்டு, மூன்று படம் தொடர்ச்சியாக நடித்தேன்;

இது, அப்படி தான். இப்போது, தூங்காவனம் படத்தில் த்ரிஷா என்னோடு நடிக்கிறார்; அவ்ளோதான். வேறு ஒன்றும் சிறப்பு காரணம் இல்லை.

எல்லோரும் உங்க கூட நடிக்க ஆசைப்படுறாங்க, நீங்க யாருடனாவது நடிக்க முடியல என்ற ஆசை இருக்கா.?

நிறைய பேர் அந்த லிஸ்ட்டுல இருக்காங்க, எத்தனையோ நல்ல நடிகர்கள் இருக்காங்க. டி.ஆர்.ராஜகுமாரி கூட நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ரங்காராவ் கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கல. இன்று வரை நான் இழந்து போன விஷயமாக இதை கருதுகிறேன். அவருடன் நடிக்கணும் நானே போய் வாய்ப்பு கேட்டிருக்கேன், ஆனால் அது நடக்கல, இந்தமாதிரி நிறைய இருக்கு.


Post your comment

Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions