நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன் அதுதான் என் பகுத்தறிவு: கமல்ஹாசன்

Bookmark and Share

நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன் அதுதான் என் பகுத்தறிவு: கமல்ஹாசன்

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?

என்று நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவில் ஆவேசமாக பேசினார். நடிகர் கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் நேற்று கொண்டாடினார்.

நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:- 
நாம் வருடந்தோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது.

இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன்படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். 

அரசியலுக்கு வர திட்டமா என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். அப்படி திட்டம் இல்லை என்று மறுத்த பிறகும், இந்த கேள்விகள் தொடர்கிறது. அரசியலுக்கு போகும் என்று நம்பி இந்த பஸ்சில் ஏறாதீர்கள்.

ஏமாந்து போவீர்கள். நடிப்பை பற்றி கேளுங்கள். அடுத்த படம் என்ன? என்று கேளுங்கள். அரசியல் பற்றி கேட்காதீர்கள். நிறைய ரத்தக்காயங்கள் பட்டுத்தான் இந்த இடத்தில் நிற்கிறேன். சந்தேகப்படாதீர்கள், அவமானப்படுத்தாதீர்கள். 

என்மேல் சந்தேகப்படுவது தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது. மரணம் எல்லோருக்கும் உண்டு. என் மரணம் வீணாக இருக்கக்கூடாது. அதற்காகத்தான் வாழ்கிறேன். 

எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது. 

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. ஒருவன் வழிபாட்டு ஸ்தலத்தில் மது அருந்திக்கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான்.

ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள். 

என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். 

மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கைக்குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்-பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேசமுடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன். 

மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் என்பதற்கு மருத்துவ ஆதாரம் இருக்கிறது. நான் சாப்பிடமாட்டேன். மிருக உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம்.

மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக்கூடாது என்று தடுப்பார்கள். 

எனது சகிப்புத்தன்மை பற்றி சந்தேகப்படுகிறார்கள். அவதூறு பேசுபவர்களுக்கு பலமடங்கு எங்களால் பதிலடி கொடுக்கமுடியும். அதை செய்யவேண்டாம் என்று கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம். மகாவீரம் என்பது அகிம்சை. விருதுகளை திருப்பிக்கொடுக்கமாட்டேன் என்றேன். அதை தவறு என்கிறார்கள். 

வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன். 

உடனே அரசியலில் ஈடுபட திட்டமா? என்று கேட்காதீர்கள். 5 வருடத்துக்கு ஒரு முறை விரலில் கறைவைக்கிறேன். அந்த கறை போதும். நாங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தெரியாதவர்களும் அல்ல. பணம் கொடுத்து இந்த விழாவை நான் நடத்தவில்லை. இது வள்ளல்களின் கூட்டம். மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம். 

சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக்கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேச பக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். 

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டில் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா?. நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால்தான் இதையெல்லாம் சொன்னேன்.

எனக்கு அக்னி பரீட்சை வைக்கமுடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அவனும் மனிதன்தான். 

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். 


Post your comment

Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions