தயாரிப்பாளர் ராமநாயுடு மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல்

Bookmark and Share

தயாரிப்பாளர் ராமநாயுடு மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமநாயுடு நேற்று மாலை ஐதராபாத்தில் காலமானார். ராமநாயுடு தமிழிலும் சில படங்களை தயாரித்துள்ளார். ராமநாயுடுவின் மறைவுக்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசனும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ராமநாயுடு அவர்கள் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் என்றோ, ஒரு தமிழ் தயாரிப்பாளர் என்றோ வட்டம் கட்டி சிறுமைப்படுத்திவிட முடியாது. அவர் ஒரு இந்திய தயாரிப்பாளர்.

அதை சொல்வதற்கு காரணம், வடநாட்டில் கே.ஆஷிப், சாந்தாராம், ராஜ்கபூர் போன்ற பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் இருந்தாலும், தேசிய சினிமா என்பதை நிறுவிய, செய்துகாட்டிய இடம் சென்னை. இங்கிருந்து புறப்பட்டவர் ராமநாயுடு.

இந்த தேசிய சினிமா என்று நான் சொல்வது ஏ.வி.எம்., ஜெமினி ஸ்டுடியோ ஆகியோர் தங்களது எல்லா படங்களையும், எல்லா மொழிகளிலும் தயாரித்தும் வெளியிட்டும், எழுதியும் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர்தான் ராமநாயுடு. அவர் ஆந்திராவுக்கு சென்றாலும் தமிழ் தயாரிப்பாளராகத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு தயாரிப்பாளர் என்பவர் பணத்தை முதலீடு செய்து அதை திருப்பி எடுக்கும் விற்பனர் மட்டும் அல்ல. கலை உணர்வும் கலை மனதும் உள்ளவராக அவர் இருக்க வேண்டும். இல்லையென்றால், வட்டிக்கு பணத்தை விடும் ஒருவருக்கும், சினிமா தயாரிப்பாளருக்கும் அதிக வித்தியாசம் இருக்காது.
இது தரமான படம், இது வித்தியாசமான படம், இது கமர்ஷியல் படம் என நீங்கள் படங்களை எத்தனை பிரிவுகள் செய்தாலும், நாயுடு அவர்கள் அதை காதலுடன் செய்தார் என்பதற்கு நானே சாட்சி.

ஒவ்வொரு காட்சியையும் படித்துணர்ந்து, அந்த காட்சியை எடுத்தாகிவிட்டதா? இந்த காட்சியை எடுத்தாகி விட்டதா? அந்த வசனத்தை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்? என்று நினைவு படுத்தியோ, மீண்டும் எடுக்கச் சொல்லியோ அல்லது வற்புறுத்தியோ செய்யச் சொல்லும் ஒரு தயாரிப்பாளரை பார்ப்பது அரிது.

கேமரா ஸ்டாண்டுக்கு அடியில் அமர்ந்துகொண்டு காட்சிகளை கவனிக்கும் ஆர்வம் அவரிடம் இருக்கும். தான் செய்த முதலீடு, தாம் நம்பும் சினிமாவில் இருக்கவேண்டும் என்று நம்பிய ஒருசில தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.

இனிமேல், அவர் நம்மிடம் இல்லை. இனிமேல் என்ன செய்வது என்று நாம் கைபிசைந்து கவலைப்படாமல் ஒரு சந்ததியை விட்டுச் சென்றிருக்கிறார் என்று பெருமை கொள்வோம்.

ஒரு தலைமுறைக்கு அடுத்த தலைமுறையே அப்பா சொல்வது தப்பு என்று சொல்லும்போது, பேரனுக்கே ஹீரோவாக அவர் இன்று வரைக்கும் இருந்துதான் போயிருக்கிறார். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை என்று நான் எவ்வாறு கூறிக் கொள்கிறேனோ, அதேபோல், அவரும் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்தது பெருமை என்று சொல்லிக் கொள்வார்.

எப்போது பார்த்தாலும், என்ன ஹீரோக்காரு எனக்கு படம் பண்ணித்தர மாட்டீங்களா? என்று செல்லமாக என்னை கடிவதும் உண்டு. அவரை வழியனுப்புவதில் சந்தோஷம் இல்லையென்றாலும் இது நடந்தே தீரவேண்டிய ஒன்று. நல்லதை செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு எனது வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions