கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்

Bookmark and Share

கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அரசியலில் கமல் பரபரப்பாக உள்ள நிலையில் அவரை சந்தித்தது ஏன்?

பதில்: கமல் சினிமாதுறை சார்ந்த முக்கியமான பிரமுகர். இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன். நான் சொன்னதை அவர் தெளிவாக கேட்டுக் கொண்டார். அவர் சினிமாவின் முன்னோடி.

சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே அவருடைய ஒத்துழைப்பு எங்களுக்கு 100 சதவீதம் இருக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் குரல் கொடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.

அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.

கேள்வி:- கமல் அரசியலுக்கு வந்த பிறகு இது போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பாரா?

பதில்:- அவர் பார்த்துக் கொண்ட ஒரு துறைதான் சினிமா. சினிமா எப்படி ஒரு துறையோ அப்படித்தான் அரசியல் இன்னொரு துறை. அவர் இப்போது 2-வது துறையை தேர்ந்தெடுத்துள்ளார். சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை. அதனால் போய் சொன்னேன்.

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நிறைய வி‌ஷயங்களை மாற்ற வேண்டும் என்பது எல்லோருடைய உணர்வு. எனவே இதில் எதிர்காலத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- தயாரிப்பாளர் சங்க போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?

பதில்:- தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை. அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும். 48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை. மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது. அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

கேள்வி:- இது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசினீர்களா?

பதில்:- இதுவரை சந்திக்க வில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.

கேள்வி:- டிஜிட்டல் ஒளிபரப்பில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இது சினிமா துறை சார்ந்த ஒரு வி‌ஷயம். மாநகராட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியுமா? இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம். அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை. இதையெல்லாம் பேசி சரி செய்யும் போதுதான் நல்ல தீர்வு ஏற்படும்.

கேள்வி:- உங்களுடைய இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. இந்த போராட்டத்தால் நஷ்டம் ஏற்படுமா?

பதில்:- இரும்புத்திரை ரிலீஸ் செய்யும்போது டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும். இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions