கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

Bookmark and Share

கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3-ந்தேதி 94 வயது பிறக்கிறது. அன்றைய தினம் அவரது சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் கலைஞர் டி.வி.யில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி திரைப்பட துறையினருக்கு ஒரு ‘‘கேட்- பாஸ்’’ போல் இருந்தார்.

திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் நுழைபவர்கள் கருணாநிதியின் வசனத்தை சிவாஜியின் குரலில் பேசி பயிற்சி பெறும் அளவிற்கு தொடக்க பள்ளியாக இருந்தார்.நான் எனது 3 வயதிலேயே அவரது வசனத்தை மழலை மொழியில் பேசியவன். கருணாநிதி வசனத்தை பேசுபவன் மட்டுமல்ல அதற்கேற்ப நடிப்பதற்கான தகுதி பெற்றவன் நான்.பல படங்களில் நான் நடித்தாலும் நேரடியாக கருணாநிதியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

‘சட்டம் என் கையில்’ பட விழாவின் போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விழாவிற்கு பிறகு நான் கருணாநிதியுடன் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. அற்புதமான கதாசிரியர். தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி. அந்த அளவிற்கு உரிமையோடு என்னிடம் நடந்து கொள்வார்.

நானும் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த படத்தையும் பார்க்க வருமாறு அழைப்பேன். நானே சில திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பித்து இருக்கிறேன்.‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடமிட்டு நான் நடித்தபோது மேக்கப்பை கலைக்காமல் அதே கெட்டப்பில் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவர் ஆச்சரியப்பட்டு மிகவும் வியந்தார்.

பெண் வேடம் மிக பொருத்தமாக அமைந்துள்ளது என்று பாராட்டினார்.ஒரு முறை நான் அவரிடம் பேசி கொண்டிருந்த போது ஜூன் 2-ந்தேதி எங்கிருந்தாய் என்று கேட்டார். நான் மும்பையில் இருந்தேன் என்றேன். 3-ந்தேதி எங்கிருந்தாய் என்றார். நான் சென்னைக்கு வந்து விட்டேன் என்றேன். எதற்காக கேட்கிறார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்போதுதான் அவர் 3-ந்தேதி எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வரவில்லையே என்று கேட்டார். அதற்கு நான் இப்படி வந்து வாழ்த்து சொல்லியது கிடையாதே என்றேன். அந்த அளவிற்கு என்னிடம் உரிமையை எதிர்பார்த்தார். கருணாநிதியின் தமிழ் உணர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆவார்கள்.

கருணாநிதியின் வசனத்தை சிவாஜி குரலில் பேசி நடித்து காட்டுவது என்பது ஒரு பரீட்சை போன்றது. ஒரு விழாவில் கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்.ஜி.ஆர். கூட பாராட்டினார்.அவரது தமிழ் வசனம் எனக்கு திரைத்துறையில் அரிச்சுவடி போல் அமைந்தது. சட்டமன்ற பணியில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறார் என்றால் அந்த சாதனையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

எல்லோரும் அவரை வாழ்த்த வயதில்லை என்பார்கள். என்னைப் பொறுத்த வரை வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். அவர் மேலும் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு வரவேண்டும் என்பது எனது ஆசை.இவ்வாறு அவர் கூறினார்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions