மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

Bookmark and Share

மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். அவர் மத்திய - மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கமல்ஹாசன் ஆரம்பத்தில் ஆதரித்தார். அது தவறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் இப்போது தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ஒரு வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பண மதிப்பு நீக்கம் (செல்லாத நோட்டு) பற்றி பிரதமர் மோடி அறிவித்த போது கட்சி வரை யறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்பட வேண்டும் என்று டுவிட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கருப்பு பணத்தை ஒழிப்ப தற்கான ஒருவழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்கு தருவது மட்டுமின்றி அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன்.

ஆனால் என் சகாக்கள் பலரும் பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் தொலைபேசியில் கூப்பிட்டு என் ஆதரவுக்கு எதிராக தங்களின் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்கள். கொஞ்ச நாள் கழித்து பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது. ஆனால் யோசனை நல்ல யோசனை தான் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

அதற்கு பின் பொருளாதார வல்லுனர்களின் விமர்சனக் குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.

தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்கு பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்ட தற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று அடம் பிடிக்காமல் தவறை ஒப்புக் கொண்டால் பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளை திருத்தி ஆவன செய்வதும் முக்கியமாக அதை ஒப்புக் கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.

சற்றே பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் முயலின் மூன்று கால் இரண்டு காலாக குறைந்தால், யாரோ நம்மை மாட்டுக்கறி சாப்பிடத் தடை செய்துவிட்டுத் தாங்கள் முயல்கறி சாப்பிடுகிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நியூயார்க்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தெல்மா ராஸ் என்பவர் இந்திய கலாச்சாரப்படி ஆபாசமாக உடை அணிந்து இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டு அல்லல்பட்டு கடைசியில் மத்திய மந்திரியின் தலையீட்டால் சென்னை வந்து சேர்ந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாஜ்மகால் பெயர் விடுபட்டது போல், இதுவும் பன்முகத்தன்மை இழந்து வரும் நாட்டில், மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான்.

இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions