தெரியாத அரசியலை விட தெரிந்த சினிமாவே மேல்! - கார்த்திக்

Bookmark and Share

தெரியாத அரசியலை விட தெரிந்த சினிமாவே மேல்! - கார்த்திக்

கடந்த, 1980 மற்றும் 90களில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் கார்த்திக். எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும், அனாயசமாக நடித்து, கைதட்டல்களை வாங்கி விடுவார். நீண்ட இடைவெளிக்கு பின்,  அனேகன் படத்தின் மூலம், தன் முத்திரையை மீண்டும் அழுத்தமாக பதித்துள்ளார்.

அவருடன் பேசியதிலிருந்து... இன்னும் இளமையாக இருக்கீங்களே...? வயதைப் பற்றி நான் யோசிக்கிறதே இல்லை. உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறேன். சொன்னா நம்ப மாட்டீங்கன்னு தெரியும்; மது குடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

சிகரெட், மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இப்போது இல்லை. அதையெல்லாம் விட்டு, 10 ஆண்டுகளாகி விட்டது. உடம்பை பராமரிக்க, பெரியவங்க நிறைய சொல்வாங்க; ஆனால், நாம் அதை பொருட்படுத்துவது இல்லை.

பெரியவங்க வார்த்தைகளுக்கு இப்போது தான் அர்த்தம் புரிகிறது. உடற்பயிற்சி, சரியான உணவு, சரியான துாக்கம்; இது தான் இப்போதைய கார்த்திக். 

அரசியலில் பெரிதாக சாதிக்க முடியவில்லையே...? உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசியல் அவ்வளவு, ஈசி இல்லை. அதில் முழுமையா ஈடுபட வேண்டும். இன்னும் அதில் முழுசாக இறங்கி, நான் வேலை பார்க்கவில்லை.

எனக்கு இப்போ சினிமாவில் தான் ஆர்வம் அதிகம். 20 வயதில் படங்களில் நடிக்க வந்தேன். எனக்கு நல்லா தெரிந்தது, புரிந்தது, வந்தது சினிமா மட்டும் தான். அரசியலில் எனக்கு அனுபவமோ, பழக்கமோ இல்லை.

இடையில், சினிமாவா, அரசியலா என்ற பெரும் குழப்பம் இருந்தது உண்மை தான். தெரியாத அரசியல் செய்வதை விட, தெரிஞ்ச நடிப்பை பண்றது நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அழகான பெண்கள் பிடிக்குமா? அறிவான பெண்கள் பிடிக்குமா?

ஒரே பதில் தான், பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. நான், பெண்களுக்கு அதிகம் மரியாதை தருபவன். என் கையை பாருங்கள்; நான், எந்த வசியமும் செய்யவில்லை.

அழகான பெண்கள் சில நேரம், அறிவான பெண்கள் சில நேரம்; மொத்தத்தில், நம் மனதில் நிற்கும் பெண்களைத் தான் நமக்கு பிடிக்கும். எந்த ஹீரோயின் கூட ஜோடியா நடிக்க ஆசைப்படுறீங்க? படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு;  டிவிடி& யில கூட பார்க்க மாட்டேன். 

ஆனாலும், இப்போது வரும் நடிகையர் ரொம்ப திறமைசாலியா இருக்காங்க; சூப்பராக டான்ஸ் ஆடுறாங்க. எனக்கு அவங்க பேர் எல்லாம் தெரியாது. மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளதால், இனிமேல் தான், யார் என்னன்னு பார்த்து விசாரித்து தெரிஞ்சுக்கணும். அமரன் - 2 படத்துக்காக உங்களை எப்படி தயார்படுத்தி இருக்கீங்க?
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கப் போகிறது.

உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கு கவனம் செலுத்துகிறேன். சினிமாவில், கால நேரம் ரொம்ப முக்கியம். முன்பெல்லாம், சரியான நேரத்துக்கு நான் வர்றதில்லை என்ற பேர் இருந்தது; இப்போ, நான் கட்டியிருந்த பழைய கடிகாரத்தையே மாற்றி விட்டேன்.

கடிகாரத்தில் ஆரம்பித்து, பல மாற்றங்கள் எனக்குள்ளே வந்துள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுறேன், படிக்கிறேன். இப்படி மனசில நிறைய ஓடிட்டுருக்கு. முக்கியமான விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்? 

நிறைய நண்பர்கள் இருக்காங்க. ஆனால், எல்லாரிடமும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது. குஷ்புவிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்; குஷ்பு, எனக்கு நல்ல தோழி.

திரும்பவும் வில்லன் ரோல் நடிப்பீங்களா? நடிகனாக எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்; நல்ல கேரக்டர்கள் வரணும். என்னை தேடி வரும் நல்ல ரோல்களை, & மிஸ் பண்ண மாட்டேன்; அதேசமயம், ஒரே மாதிரி போர் அடிக்கும் கேரக்டர்களும் பண்ண மாட்டேன்.

கவுதமும், நீங்களும் எப்போ சேர்ந்து நடிப்பீங்க? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க, நிறைய,  ஸ்கிரிப்ட் வந்தது; இப்போ பண்ண வேண்டாம் என, முடிவு செய்திருக்கோம்.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions