பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: நடிகர் கார்த்தி பயணிகளிடம் வழங்கினார்

Bookmark and Share

பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: நடிகர் கார்த்தி பயணிகளிடம் வழங்கினார்

ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு செய்துள்ள வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்து நேரடியாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதையொட்டி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே வாரிய உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த பிரமுகர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது, படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்பன உள்பட பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினார்.

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் அனுபம் ஷர்மா மாதிரி ரெயில் பெட்டியை கார்த்திக்கு வழங்கினார். பின்னர் பாதுகாப்பான பயணம் செய்வேன் என்ற உறுதிமொழி அடங்கிய பதாகையில் கார்த்தி தனது கையெழுத்தினை போட்டார்.

இதனைத்தொடர்ந்து ரெயில் பயணிகளும் பதாகையில் கையெழுத்திட்டனர். இதனைத்தொடர்ந்து விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-

ரெயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.சி. காரில் செல்வதை விடவும் ரெயிலில் செல்வதைதான் நான் அதிகம் விரும்புவேன். ரெயில் பயணிகளாகிய உங்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற சமயங்களில் ரெயில் சேவைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த தருணத்தை எளிதில் மறந்துவிடமுடியாது.

சிலர் செல்போனில் பேசியபடி, விளையாடியபடி கவனக்குறைவு காரணமாக ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் ரெயில் மோதி மரணம் அடைகின்றனர். இறப்பவர்களை விடவும் அவர்களின் குடும்பத்தினருக்குத்தான் அதிக சுமை ஏற்படுகிறது. ‘ஹீரோயிசம்’ சினிமாவுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் குறிப்பாக ரெயில் பயணத்தில் ‘ஹீரோயிசம்’ காட்டவேண்டாம். பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாதவாறு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டுவருகிறது. ரெயில்வேக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை தொடருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions