நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்: கருணாஸ் பேட்டி

Bookmark and Share

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்: கருணாஸ் பேட்டி

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

“நான் இளைஞராக இருந்த போது நடிகராக வேண்டும் என கனவு கண்டேன். அது நிறைவேறியது. ஆனால் அரசியல்வாதி ஆவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை எனது அரசியல் தாக்கம் எதிர்பாராதது. ஆனால் நான் அரசியலுக்கு வருவேன் என எனது குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாக அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு பல உதவிகள் செய்து இருக்கிறேன். எனது செல்வாக்கை பயன்படுத்தி மாணவர்கள் கல்வி பயில இடம் வாங்கி கொடுத்து இருக்கிறேன். நடிப்புக்கும், அரசியலுக்கும் இடையே என்னால் வித்தியாசம் காண முடியவில்லை.

ஆனால் தற்போது எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிய வில்லை. எனது மனைவி மற்றும் குழந்தைகளை ‘மிஸ்’ பண்ணுகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நான் படங்களில் நடித்து வருகிறேன். எனவே, இதற்கான பொறுப்பும் எனக்கு உள்ளது. கடுமையான பணிகளுக்கு இடையே எனது திருவாடானை தொகுதி பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. என்னை எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுத்த அத்தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் இந்த அங்கீகாரத்துக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா தான் காரணம். தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக திருவாடானை மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். இது நெல் விளையும் மண். இங்கு விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை வழங்கும் கால்வாய்கள் நில ஆக்கிரமிப்பு காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன. மக்கள் உப்பு தண்ணீரை குடி நீராக பயன்படுத்துகின்றனர். இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இதுகுறித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்து இருக்கிறேன். அவர் இப்பிரச்சினையை தீர்க்க நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வார்.

ஆசைப்படுவது மனிதன் இயல்பு, பேராசைபடுவது தான் தவறு. 4, 5 படங்களில் நடித்தவுடன் முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என நினைப்பது தவறு.

அரசியல் சாதாரண வி‌ஷயமல்ல. நடிகர் சங்க தேர்தலின் போதே பல இடங்களுக்கு சென்று ஓட்டு வேட்டை நடத்தினோம். பல இரவுகள் தூக்கமின்றி கழித்திருக்கிறோம். சட்டசபை தேர்தலிலும் சாதாரணமானதல்ல. ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து இருக்கிறேன்.

நடிகர்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்கின்றனர். சமுதாயத்தில் உழைப்பவர்கள் அரசியலில் வரவேற்கப்படுகிறார்கள். தற்போதைய காலத்தில் மக்கள் புத்திசாலிகளாக உள்ளனர். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் வெற்றி பெற்றோம். முதலில் நடிகர்களின் விவரங்களை சேகரித்தோம். அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தி நிதி சேகரித்தோம். தற்போது பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன.

தற்போது எம்.எல்.ஏ. பணியில் பிசி ஆக இருக்கிறேன். நடிகர் என்ற முறையில் எதிர்காலத்தில் நடிகர் சங்க பதவியில் (துணைத் தலைவர்) இருந்து விலகுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions