
இயக்குனர் பாலா தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சண்டி வீரன்’. இதில் நாயகனாக அதர்வா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா, ஆனந்தி, இயக்குனர் சற்குணம், மற்றும் தயாரிப்பாளர் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் அதர்வா பேசும்போது, இப்படத்தில் நடித்தது எனக்கு இரண்டு விருது கிடைத்தமாதிரி இருக்கிறது. முதல் பெரிய விருது பாலா தயாரிப்பில் நான் நடித்திருப்பது. இரண்டாவது விருது சற்குணம் இயக்கத்தில் நடித்திருப்பது.
நாயகி ஆனந்தி பற்றி நான் சொல்லியே ஆகணும், அவர் குழந்தை குணம் கொண்டவர். இவர் இயக்குனரிடம் நடனம் ஆடுகிற மாதிரி எனக்கு பாடல் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சற்குணம் அருணகிரி இசையில் ஒரு பாடல் உருவாகி வருகிறது. அந்த பாடலை நியூசிலாந்தில் படமாக்க இருக்கிறோம் என்று கூறினார்.
இதைகேட்ட ஆனந்தி, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்துக் கொண்டார். மேலும் மிகுந்த ஆர்வத்துடன் படக்காட்சிகளை நடித்து கொடுத்தார். இதே உற்சாகம் ஆனந்தியின் தயாருக்கும் இருந்தது. எப்போது நியூசிலாந்து போவோம் என்று ஆர்வத்தோடு அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் இறுதியில் நியூசிலாந்திற்கு செல்லவில்லை. ஆனந்தியை உற்சாகப்படுத்தவே இயக்குனர் அவ்வாறு கூறினார் என்றார்.
இதற்கு ஆனந்தி பதில் கூறும்போது, என்னை நியூசிலாந்திற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நானும் ஆர்வமாக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டேன். ஆனால் என்னை கடைசி வரை நியூசிலாந்துக்கு அழைத்து செல்லவில்லை. நான் ஆசைப்பட்ட மாதிரி நடனம் ஆடுவதற்கு பாடலையும் தரவில்லை, இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று நகைச்சுவையோடு கூறினார்.
Post your comment