13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு

Bookmark and Share

13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு

இந்திய திரை உலகை தடம் புரட்டிப் போட்டவர்கள் வெகு சிலர் தான். அந்த வெகு சிலரில் உலக சாதனை படைக்கும் அளவுக்கு இந்திய சினிமாவுக்கு கலைச் சேவை செய்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரபல படத்தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு.

13 மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த இவர், அதற்காக உலக சாதனை புத்தமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் கூட டி.ராமநாயுடுவின் சாதனை இமயமாக உயர்ந்து நிற்கிறது. உலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் டி.ராமாநாயுடுவின் சினிமா தயாரிப்பு ஆசையைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றன. எப்படி இவரால் 150–க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க முடிந்தது என்று சினிமாவில் பல துறை கலைஞர்களும் வியக்கிறார்கள்.

ஓரிரு படங்கள் தயாரித்து முடிப்பதற்குள்ளேயே ஓய்ந்து போகும் இந்த கால படத் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவர் 52 ஆண்டுகளாக சினிமா படங்களை தயாரித்து தள்ளினார் என்பதை நினைக்கும் போது, உண்மையிலேயே அவர் ‘‘கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’’ என்றே தோன்றும். இத்தனைக்கும் டி.ராமாநாயுடுவின் குடும்பம் எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பமாகும். அவரது தந்தை வெங்கடேஸ்வரலு, தாய் லட்சுமி தேவம்மா இருவரும் விவசாயிகள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு அன்றைய சென்னை மாகாணத்தில் உள்ள கரம்கேடு (இப்போது ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது) எனும் அவர்களது பூர்வீக ஊரில் 1936–ம் ஆண்டு டி.ராமாநாயுடு பிறந்தார்.

அவரது முழுப்பெயர் தக்குபதி ராமாநாயுடு. அதை சுருக்கி டி.ராமாநாயுடு ஆனார். படிப்பில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. எனவே பள்ளி விடுமுறை நாட்களில் அவர் ஓரு ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராக சேர்த்து விடப்பட்டார். எப்படியோ பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் மேற்படிப்பு படிக்க சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் வரவில்லை. ஊருக்கு திரும்பி போய் ஒரு ரைஸ்மில் தொடங்கினார். அது கை கொடுக்கவில்லை.

பஸ் வாங்கி போக்குவரத்து நிறுவனம் நடத்தினார். அதுவும் லாபம் தரவில்லை. இந்த சமயத்தில் அவர் ஊரைச் சேர்ந்த ஒருவர் சம்பு பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார். சினிமா கம்பெனி என்றதும் ராமாநாயுடுவுக்கு ஆர்வம் அதிகரித்தது. தந்தையை கட்டாயப்படுத்தி வற்புறுத்தி சொத்தில் ஒரு பகுதியை விற்க செய்து சம்பு பிலிம்ஸ் பட நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். அதன் பிறகு தான் ஒரு படத்தை தயாரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? சூட்டிங் பணிகளை எப்படி ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்? நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களை எப்படி வேலை வாங்க வேண்டும்? என்பது போன்ற பல விஷயங்களை ராமாநாயுடு தெரிந்து கொண்டார்.

சம்பு பிலிம்ஸ் நிறுவனம் மூலம் அவருக்கு நாகேஸ்வரராவ், எஸ்.வி.ரங்கராவ் போன்ற நடிகர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் ஒரே ஒரு படத்துடன் தயாரிப்பை நிறுத்தி கொண்டதால் ராமாநாயுடுவின் சினிமா தொடர்பு இடையில் சற்று குறைந்தது. அந்த காலக் கட்டத்தில் அவர் தெலுங்கு படங்களில் சிறு, சிறு வேடங்களில் தலைக்காட்டினார். பிறகு ஒரு பெரிய புகையிலை தொழிற்சாலை ஒன்றை ராமாநாயுடு தொடங்கினார்.

அந்த தொழிற்சாலை மூலம் அந்த காலத்திலேயே அவருக்கு லட்சம், லட்சமாக லாபம் கிடைத்தது. என்றாலும் ராமாநாயுடு ஆசையெல்லாம் சினிமா தொழில் மீது தான் இருந்தது. எனவே 1962–ம் ஆண்டு புகையிலை தொழிற் சாலைக்கு டாடா காட்டி விட்டு சென்னை வந்தார்.

சென்னையில் தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து செங்கல் சூளை ஒன்றை தொடங்கினார். அந்த சமயத்தில் தான் சினிமா உலகம் அவரை மீண்டும் வாரி அணைப்பதற்கான ஒரு சூழல் அதிர்ஷ்டவசமாக உருவானது அவரது உறவினரான பாஸ்கர்ராவ் என்பவர் அனுபோ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட ராமாநாயுடு 1963–ம் ஆண்டு முதன்முதலாக ‘‘அனுராகம்’’ என்று ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டார்.

ஆனால் அந்த படம் ஓடவில்லை. படுதோல்வியை சந்தித்தது. எனவே அந்தபடத்தில் போட்ட பணத்தை எடுக்க இன்னொரு படம் தயாரிக்க ராமாநாயுடு முடிவு செய்தார். ஆனால் அவர் உறவினர் பாஸ்கர் ராவுக்கு பயம் வந்து விட்டது. ‘‘ஆளை விடு’’ என்று படம் தயாரிக்க மறுத்துவிட்டார். இதனால் ராமாநாயுடு தன் இளமை கால நண்பர்கள் ராஜேந்திர பிரசாத் (மாதவி கம்பைன்ஸ்) மற்றும் சுப்பாராவ் ஆகியோருடன் சேர்ந்து தன் மூத்த மகன் சுரேஷ் பெயரில் ‘‘சுரேஷ் புரடெக்ஷன்ஸ்’’ என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்.

1964–ம் ஆண்டு தன் சொந்த பட நிறுவனம் மூலம் ‘‘ராமூடு பீமூடு’’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் தென் இந்தியா முழுவதும் சக்கைப் போடு போட்டது. ராமாநாயுடுக்கு பணம் கொட்டியது. இதனால் அடுத்தடுத்து நிறைய படங்கள் தயாரித்தார்.

1968–ம் ஆண்டு பி.நாகிரெட்டி மகன்களுடன் சேர்ந்து விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரித்தார். ஆனால் பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர். 1971–ம் ஆண்டு அவர் பிரேம்நகர் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தார். இந்த படம் தோல்வி அடைந்தால் சினிமா தொழிலுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று அறிவித்தார். ஆனால் அந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் ராமாநாயுடுவின் சினிமா தயாரிப்பு தொடர்ந்தது. படங்களாக தயாரித்து தள்ளினார்.
1993–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டுக்குள் 74 படங்களை தயாரித்து வெற்றிகரமாக வெளியிட்டு எல்லாரையும் பிரமிக்க வைத்தார். ‘‘செகரட்டரி’’ என்ற படத்துக்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்திய போது தான் அவருக்கு ஐதராபாத்தில் ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ஐதராபாத்தில் எந்த வசதியும் இல்லை. மலை பிரதேசமான அங்கு ஸ்டூடியோ கட்டினால் அது கை கொடுக்காது என்று பலரும் ராமாநாயுடுவை பயம் காட்டினார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத ராமாநாயுடு ஐதராபாத்தில் ஸ்டூடியோ கட்டி 1989–ம் ஆண்டு ஸ்டூடியோவை திறந்தார். பிறகு அவுட்டோர் சூட்டிங்குக்காக நனகிரம்குடா என்ற ஊரில் சினிமா கிராமத்தையே உருவாக்கினார். இதன் மூலம் அங்கு எல்லா மொழி படங்களையும் தயாரிக்கும் சூழலை தன்னந்தனி ஆளாக நின்று உருவாக்கினார்.

13 மொழிகளில் அவர் 150–க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார். இந்த ஆண்டு அவர் தயாரித்த கோபாலா, கோபாலா படம் தான் அவர் தயாரித்த கடைசி படமாகும். 150–க்கும் மேற்பட்ட அவரது தயாரிப்புகளில் தெலுங்கு படங்களே அதிகமாகும். தமிழில் அவர் நேரடியாக 10 படங்கள் தான் தயாரித்தார்.


1967–ம் ஆண்டு என்.டி.ராமராவ் ஜமுனா நடித்த ‘‘ஸ்ரீகிருஷ்ண துவாபாரம்’’ என்ற படம் தான் அவர் தயாரித்த முதல் தமிழ் டப்பிங் படமாகும். வசந்த மாளிகை, திருமாங்கல்யம், மதுரகீதம், தனிகாட்டு ராஜா, தெய்வப்பிறவி, மைக்கேல் ராஜ், கை நாட்டு, சிவப்பு நிறத்தில் சின்னப்பூ ஆகிய படங்கள் தயாரித்தார்.

தமிழில் அவர் தயாரித்த படங்களில் வசந்த மாளிகை மிகவும் வெற்றிகரமாக ஓடிய படமாகும். திருமங்கல்யம் படத்தில் ஜெயலலிதா, முத்துராமன் நடித்தனர். தமிழில் இவர் படங்களில் பண்டரிபாய், ஜெயலலிதா, வாணிஸ்ரீ, ஸ்ரீவித்யா, பத்மினி, ஸ்ரீதேவி, ராதிகா, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஓரியா, பஞ்சாபி மொழிகளில் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும் அவர் படம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இவரது திரையுலக சேவைக்காக 2012–ல் மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்தது.

2009–ம் அவர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது. 5 தடவை நந்தி விருது பெற்றுள்ள அவர் படங்கள் 4 தடவை தேசிய விருது பெற்றுள்ளன. 24 இயக்குனர்களை அவர் அறிமுகம் செய்துள்ளார். அது போல ஏராளமான இசை அமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்களை இவர் உருவாக்கி உள்ளார்.

இந்தியாவில் உள்ள நடிகர் – நடிகைகளில் 80 சதவீதம் பேர் இவர் தயாரித்த படங்களில் நடித்து புகழ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்ட அவர் 1999–ம் ஆண்டு குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற எம்.பி. ஆனார். ஆனால் 2004–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அம்த குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதன் பிறகு அவர் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதில் அவர் திரை உலகம் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் செலவிடுவதற்காக 1991–ம் ஆண்டு ராமாநாயுடு சாரிடபிள் டிரஸ்ட் என்ற ஒரு அறக்கட்டளையைத் தொடங்கினார். அந்த அறக்கட்டளை மூலம் மேடக் மாவட்டத்தில் 33 ஏக்கரில் ராமாநாயுடு ஊரக மேம்பாட்டு கழகம் ஒன்றை உருவாக்கினார்.

அந்த கழகம் ஆந்திர மாநில மக்களுக்கு கல்விச் சேவைகளை வழங்கி வருகிறது. சினிமா ரசிகர்கள் கொடுத்ததை அவர்களுக்கே திருப்பி கொடுத்த இவர் தன் உழைப்பால் உயர்ந்து, சினிமா துறையினருக்கு மட்டுமின்றி மற்றவர்களின் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions