
தமிழ் சினிமாவில், காமெடியில் அசத்திய நடிகைகளை விரல் விட்டு எண்ணவிடலாம். அவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நடிகை கோவை சரளா. கவுண்டமணி-செந்தில் காலம் தொடங்கி, இந்தக்காலத்து நடிகர்கள் வரை தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கும் கோவை சரளாவிற்கு, முனி படம் நல்ல பிரேக்கை கொடுத்தது. தொடர்ந்து காஞ்சனா-2, அரண்மனை போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
தற்போது வெளியாகி இருக்கும் கார்த்தியின் கொம்பன் படத்திலும், கார்த்தியின் அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார் கோவை சரளா. கொஞ்சமே கொஞ்சம் காமெடியும், பாசமிகு அம்மாவாகவும் மிளிர்ந்திருக்கும் கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்.
இந்த பிறந்தநாளை கொம்பன் படத்தின் சக்சஸ் மீட்டில் கொண்டாடினார். கடந்தவாரம் வெளியான படங்களில் கொம்பன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையொட்டி கொம்பன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியிலே கோவை சரளா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கோவை சரளா, மீண்டும் மீண்டும் பிறப்பது போன்று உள்ளது. அதிகமுறை பிறந்தநாள் விழாக்களை தவிர்த்து இருக்கிறேன்.
ஆனால் இந்தாண்டு அது முடியவில்லை. கொம்பன் படக்குழுவோடு கொண்டாடினேன். கொம்பன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநர் முத்தையா மற்றும் கார்த்தி ஆகியோருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
Post your comment