லிங்கா பட விவகாரம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Bookmark and Share

லிங்கா பட விவகாரம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு, இயக்குனர் ரவிரத்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘லிங்கா படத்தின் கதை எனக்கு சொந்தமானது. ‘முல்லைவனம் 999’ என்ற படத்துக்காக அந்த கதையை தயார் செய்து வைத்திருந்தேன்.

எனது கதையை திருடி லிங்கா படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லிங்கா படத்தின் கதை யாருடையது என்பது குறித்து சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

மேலும், படத்தை வெளியிடுவதற்கு முன்பு 5 கோடி ரூபாயை ஐகோர்ட்டு வங்கிக் கணக்கில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது. 

இந்த நிபந்தனை ராக்லைன் வெங்கடேசால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, லிங்கா படம் வெளியானது. இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இயக்குனர் ரவிரத்தினம், லிங்கா படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்றும்,

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் லிங்கா படத்தின் கதை தங்களுக்கு சொந்தமானது என்று யாரிடமும் கூறக்கூடாது என்றும் உத்தரவிடக்கோரி மதுரையில் உள்ள கூடுதல் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, ராக்லைன் வெங்கடேஷ் சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்தார். இந்த ‘அப்பீல்’ மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,

1 கோடி ரூபாய் மட்டும் வங்கி உத்தரவாதம் செலுத்தினால் போதும் என்றும், வங்கியில் டெபாசிட் செய்த பணம் 5 கோடி ரூபாயை ராக்லைன் வெங்கடேஷ் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.

மேலும், ரவிரத்தினம் தாக்கல் செய்துள்ள வழக்கை 6 மாதத்துக்குள் மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்தநிலையில், ராக்லைன் வெங்கடேஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ரவிரத்தினம் தாக்கல் செய்த மனுவை வேறொரு கோர்ட்டுக்கு மாற்றி விரைவில் விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘இயக்குனர் ரவிரத்தினம் தாக்கல் செய்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற இயலாது.

மதுரை கூடுதல் முன்சீப் கோர்ட்டு இந்த வழக்கை 30.4.2016-க்குள் விசாரித்து முடிக்க வேண்டும். தினமும் விசாரணை என்ற அடிப்படையில் வழக்கை விசாரிக்கலாம்‘ என்று உத்தரவிட்டார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions