ரஜினியை மட்டுமே டார்க்கெட் வைப்பதா? லிங்கா விநியோகஸ்தர்களுடன் பத்திரிகையாளர்கள் மோதல்

Bookmark and Share

ரஜினியை மட்டுமே டார்க்கெட் வைப்பதா? லிங்கா விநியோகஸ்தர்களுடன் பத்திரிகையாளர்கள் மோதல்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் லிங்கா. இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சொல்லி கடந்த சில மாதங்களாகவே நஷ்டஈடு கோரி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜனவரி 10-ந்தேதி சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதமும் நடத்தப்பட்டது.

அதையடுத்து, ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி என்பவர் விநியோகஸ்தர்களை சந்தித்து ரஜினி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார் என்று சொன்னபோது, லிங்கா படம் குறித்த வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டதாம். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விநியோகஸ்தர்களை திருப்பூர் சுப்பிரமணி சந்தித்தபோது, 10 சதவிகிதம் நஷ்டஈடு மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டதாம்.

இதற்கு லிங்கா விநியோகஸ்தர்கள் உடன்படவில்லை. அதனால் நேற்றைய தினம் சென்னையில் லிங்கா படத்தை வாங்கிய சில ஏரியா விநியோகஸ்தர்கள் பிரஸ்மீட் வைத்தனர். அப்போது கலந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம், 45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட லிங்கா படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்று விட்டு, வெறும் 33 கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள முன்வராததால், அடுத்தகட்டமாக நாங்கள் மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவிருக்கிறோம் என்று அறிவித்தனர்.

அதுவும், ரஜினியின் வீட்டு வாசலில் இருந்துதான் அந்த போராட்டத்தை தொடங்குகிறோம் என்று கூறினர். அப்போது, லிங்கா படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். படத்தை வெளியிட்டது வேந்தர் மூவீஸ் அப்படியிருக்க நீங்கள் அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்தை மட்டுமே டார்க்கெட்டாக வைப்பது ஏன்? என்று நிருபர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு, எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷ் யாரென்றே தெரியாது. ரஜினியை நம்பித்தான் இந்த படத்தை வாங்கினோம். அவர்தான் படத்தின் ஆடியோ விழாவில் படத்தைப்பற்றி ரொம்ப பெருமையாக பேசினார். அதனால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் பெரிய நம்பிக்கை வைத்து லிங்காவை வாங்கினோம் ஆனால், திரைக்கு வந்து 3 நாட்களிலேயே வசூல் குறைந்து விட்டது. ரஜினியின் கேரியரில் இல்லாத ப்ளாப் இந்த படம்.

இதற்கு முன்பு ரஜினி படங்கள் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் கொடுத்தபோது அவரே முன்வந்து உதவி செய்திருக்கிறார். அதேபோல்தான் இப்போதும் அவரிடம் கேட்கிறோம். நாங்கள் தியேட்டர்காரர்களுக்கு 18.5 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. எங்களது இக்கட்டான நிலையை சொல்லியும் ரஜினி இதுவரை எங்களை சந்திக்க முன்வரவில்லை.

மேலும் இந்த படத்திற்காக ரஜினி 60 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அப்படியிருக்க எங்களுக்கு ஏற்பட்ட 33 கோடி ரூபாய் நஷ்டத்தை அவர் தீர்த்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில்தான் உதவி கேட்கிறோம் என்றனர். அப்படியென்றால், இந்த பிரச்சினைக்குள் ஏன் வேல்முருகன், சீமான் என சிலரை கொண்டு வந்தீர்கள்? என்று கேள்விகள் எழுந்தபோது, ஆரம்பத்தில் ரஜினி தரப்பிற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றபோது அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

அதன்பிறகு எங்களது நிலையை உணர்ந்து சிலர் குரல் கொடுத்தனர். மேலும், நாங்கள் ரஜினியை பேசிய சில வார்த்தைகள் அவரை காயப்படுத்தி விட்டதாக சொன்னார்கள். அதையடுத்து நாங்கள் அதற்கு பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். சரி, நீங்கள் இப்படி படம் ஓடவில்லை என்று நஷ்டஈடு கேட்பது போன்று, படம் சரியில்லை என்று வாங்கிய டிக்கெட் தொகையை ரசிகர்கள் திரும்பக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா? என்றபோது,  ரசிகர்களைப் பொறுத்தவரை படம் பற்றி கேள்விப்பட்டுதான் பெரும்பாலும் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டவே இல்லை.

நாங்களும் ரஜினி படம் பற்றி பெரிதாக சொன்னதை நம்பித்தான் வாங்கினோம். ஆனால் இப்போது மோசம் போய் விட்டோம். அதுவும் எங்கள் சக்திக்கு மீறிய பெரிய தொகையை இழந்து நிற்கிறோம். அதனால்தான் எங்களை காப்பாறறும்படி ரஜினியை கேட்டு வருகிறோம். ஆனால் இந்த பிரச்சினைக்குள் அரசியல் இருப்பதுபோல் தெரிகிறதே? இதில் அரசியல் எதுவும் இல்லை.

பாதிக்கப்பட்ட நாங்கள்தான் நிவாரணம் கேட்கிறோம். மேலும், ரஜினியே எங்களுக்கு உதவ முன்வந்தபோதும், சில நடிகர்கள்தான் அவரை தடுப்பதாக கூறப்படுகிறது. இப்படி நீங்கள் நஷ்டஈடு கொடுத்தால், அதன்பிறகு எங்கள் படங்கள் ப்ளாப் ஆனால், ஆளாளுக்கு கேட்கத் தொடங்கி விடுவார்கள் என்று அவரை தடுக்கிறார்களாம். ஆக இந்த பிரச்சினையை முடிக்க விடாமல் சில நடிகர்கள்தான் தடுக்கிறார்கள். ஒருவேளை ரஜினி நீங்கள் கேட்கும் அளவுக்கு நஷ்டஈடு தர முன்வராமல் போனால் என்ன செய்வீர்கள்? அதற்காகத்தான், விரைவில் மெகா பிச்சை போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கையில் பதாகை, திருவோடு ஏந்தி இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களும், எங்களது ஆதரவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையிலுள்ள ரஜினி வீட்டு வாசலில் இருந்து இது நடக்கிறது. மேலும், எதிர்காலத்தில் ரஜினி நடிக்கும் படங்களுக்கும், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் படங்களுக்கும் தியேட்டர்களில் ரெட் கார்டு போடுவார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் இதை சந்தித்துதான் ஆக வேண்டும் என்றனர்.  இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ரஜினி தங்களை மோசடி செய்து விட்டது போன்ற பேனர்களையும் வெளியில் வைத்திருந்தனர். அதோடு, வெளியாட்கள் யாராவது புகுந்து கலாட்டா செய்து விடக்கூடாது என்பதற்காக போலீஸ் பந்தோபஸ்தும் போடப்பட்டிருநதது. 


Post your comment

Related News
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions