திரைப்படங்களும் வெற்றி விழாக்களும்

Bookmark and Share

திரைப்படங்களும் வெற்றி விழாக்களும்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தின் வெற்றி விழாக்களைக் கொண்டாடுவது என்பது இப்போதெல்லாம் காணக் கிடைக்காத ஒன்றாகி விட்டது.

முன்பெல்லாம் 100 நாட்கள், 150 நாட்கள், 175 நாட்கள், 200 நாட்கள் என திரைப்படங்களின் போஸ்டர்களை சாலைகளில் பார்ப்பதே ஒரு சராசரி திரைப்பட ரசிகனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வருடத்தின் கடைசியில் எந்தப் படம் 100 நாட்கள் ஓடியது, எந்தப் படம் 175து நாள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது என ஒரு ரசிகனாக கணக்கிட்ட காலமெல்லாம் இப்போதெல்லாம் மலையேறிப் போய்விட்டது.

குறைந்த திரையரங்குகள் அதிகமான நாட்கள் ஒரு படம் பற்றி நீண்ட நாட்கள் பேசிய மகிழ்ச்சி, அந்தப் படத்தின் பாடல்களை படம் தியேட்டரை விட்டு வெளியேறும் வரை அடிக்கடி வானொலியிலோ, டேக் ரிக்கார்டரிலோ கேட்டதெல்லாம் மறந்து விடுமோ என்று அச்சப்பட வைக்கிறது.

80களில் நடிகர் மோகனை வெள்ளி விழா நாயகன் என்றே சொல்வார்கள். ராமராஜன் நடித்த பல படங்கள் எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் கிராமத்துப் பின்னணியில் மட்டுமே குறைந்த செலவில் எடுக்கப்பட்டு 100 நாட்களைக் கடந்து சாதாரணமாக ஓடியிருக்கும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் படங்களில் எந்தப் படம் 100 நாளைக் கடக்கும், எந்தப் படம் 200 நாளைக் கடக்கும் என்றெல்லாம் அவரவர் ரசிகர்கள் விவாதித்துக்  கொண்டிருப்பார்கள்.

ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் எந்தப் படமாவது உண்மையிலேயே 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியதா, 100 நாட்கள் ஓடியதா என்று பார்த்தால் யோசித்து யோசித்து சொல்ல வேண்டியிருக்கும்.

நாட்களின் இடத்தை தியேட்டர்களின் எண்ணிக்கை எடுத்துக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு படம் இப்போதெல்லாம் சுமாராக 300லிருந்து 400 திரையரங்கு வரை வெளியிடப்படுகிறது. அப்படியிருக்க அந்தப் படங்கள் எப்படி 100 நாட்களைக் கடந்து ஓட முடியும் என்கிறார்கள்.

அந்த 300, 400 கணக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள், மிகப் பெரிய இயக்குனர்கள், மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்குத்தான் இருக்கிறது. சாதாரண குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் மொத்தமாக தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களில் வெளியானாலே பெரிய விஷயமாக இருக்கிறது.

அந்தப் படங்களில் ஏதாவது ஒரு சில படமாவது தரமான, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்து ஒரு 25 நாளாவது ஓடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. ஆனால், அதுவும் ஏமாற்றத்தில்தான் முடிவடைகிறது.

முன்பெல்லாம் பத்திரிகை விளம்பரங்கள், ரேடியோ விளம்பரங்கள் மட்டும்தான் ஒரு படத்திற்கு செய்யப்படும். அந்தந்த ஊர்களில் போஸ்டர்கள் மூலமோ, இல்லை பேருந்து நிலையங்களில் அறிவிப்புகள் மூலமோ விளம்பரம் செய்தார்கள். அதற்கு மேல் ஒரு படத்திற்கு விளம்பரம் செய்ய முடியாது.

ஆனால், இன்று டிவி, இணைய தளம், சமூக வலைத்தளம், மொபைல், இன்னும் வாட்ஸ்அப் வரை படத்தை விளம்பரப்படுத்த பல வழிகள் வந்து விட்டது. அவற்றின் மூலமும் இன்னும் அதிகமான ரசிகர்களை ஈர்க்க முடியாமல் இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம், படத்தின் கதையைத்தான் பொதுவான காரணமாகச் சொல்வார்கள். ஆனால், ஒரு படம் ஓடி வெற்றி பெற்று அது அதிக நாட்கள் ஓடுவதற்கு பல காரணங்களைச் சொல்பவர்கள், தோல்வியடைந்து சில நாட்களில் தியேட்டரை விட்டு வெளியேறும்  போது அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு படம் அதிக நாட்கள் ஓடுவதால் அந்த தயாரிப்பாளர், இயக்குனர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள்,  நட்சத்திரங்கள் என அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சி, ஒரு உத்வேகம் இருக்கும். இன்னும் இது போல் பலபலப் பல விழா எடுக்கும் படங்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதிகமான திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிடுவதால் மட்டும் அதற்கு ஒரு விழாவையெல்லாம் கொண்டாடி விட முடியாது.

படத்தின் ரிசல்ட் சரியில்லை என்றால் இரண்டாவது, மூன்றாவது நாட்களிலேயே அதில் பெரும்பாலான தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் எங்கே விழாவைக் கொண்டாடுவது.

சமீபத்தில் ரசிகர்கள் மட்டுமே கொண்டாடிய லிங்கா படத்தின் 100வது நாள் விழா சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களும் பத்திரிகைகளில் விளம்பரத்தைக் கொடுத்ததோடு சரி.

ஆனால், நிஜமாகவே அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவிற்கு அந்தப் படம் சார்ந்த  இறுக்கமான சூழ்நிலைதான் அப்போது நிலவியது. மனமுவந்து அதையும் வெற்றியாகக் கொண்டாடும் மனநிலை ஒரு ரசிகனுக்கு இருக்கலாம்.  

பல நாட்கள் வெறும் காலை காட்சி ஓடியதற்காக படக்குழுவினர் மிகப் பெரிய விழாவைக் கொண்டாடிவிட முடியுமா என்ன ?

ரஜினிகாந்த் நடித்த படங்களின் வெற்றி எப்படிப்பட்டது என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். எத்தனையெத்தனை படங்கள் 100 நாட்கள், 175 நாட்கள் ஓடின. ஏன் சந்திரமுகி திரைப்படம் 890 நாட்கள் ஓடி சாதனை புரிந்ததை மறந்துவிட முடியுமா.  

அந்தப் படங்களின் வெற்றி விழாக்களைக் கொண்டாடியதில் இருந்த உற்சாகம் லிங்கா படத்தின் வெற்றியைக் கொண்டாடியதில் இருந்திருக்குமா ?

இந்த ஆண்டில் இன்றைய தேதி வரையிலான 88 நாட்களில் இதுவரை சுமார் 60 படங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படங்களில் எத்தனை படங்கள் 5 நாட்களைக் கடந்திருக்கும் எத்தனை படங்கள் 50 நாட்களைக் கடந்திருக்கும் எனக் கணக்கிட்டால் ஒரு திரைப்பட ரசிகனுக்கு அதிகமான ஏமாற்றமே மிஞ்சும்.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் 50 நாட்களைக் கடந்திருக்கிறது. ஷங்கர் இயக்கிய ஐ படம், விஷால் நடித்த ஆம்பள ஜிவி பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் ஆகியவை 50 நாட்களைக் கடந்திருக்கிறது. தனுஷ் நடித்த அனேகன் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிசட்டை 25 நாட்களைக் கடந்திருக்கிறது.

இந்தப் படங்களில் சில படங்கள் அந்த குறிப்பிட்ட நாட்களைக் கடந்ததும் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டுவிட்டன. ஒரு சில படங்கள்தான் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் எந்தப் படமாவது 100 நாளைத் தொடுமா, விழாவைக் கொண்டாடுவார்களா என ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் நாயகனின் ரசிகர்கள் கண்டிப்பாக நினைப்பார்கள்.

இனி, கோடை விடுமுறையில் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றாவது இப்படிப்பட்ட நாள் கணக்கு சாதனையை நிகழ்த்தி வெற்றி விழா கொண்டாடுமா, அல்லது வழக்கம் போல அதிக திரையரங்குகள் கணக்கில் சாதனை நிகழ்த்தி அடங்கி விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

வெற்றி விழா ஷீல்டுகளை இன்றைய தலைமுறை நடிகர்கள் தங்களது வீட்டு அலமாரிகளில் வைத்து அழகு பார்க்கும் காலம் வருமா ?


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions