
பட அதிபர் மதன் தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 5½ மாதமாக தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனது தோழி வர்ஷாவின் பங்களா வீட்டில் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மதனை கடந்த 21-ந் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர்.
மே மாதம் இறுதியில் தலைமறைவான மதன், திருப்பூர் வருவதை கடந்த ஜூலை மாதம் தனது தோழி வர்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் மதனுக்காக ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை வர்ஷா தனது பெயரில் வாங்கியதாக தெரிகிறது. இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி தான் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில் தனது மகனின் பெயரை எழுதியுள்ளார்.
அதன்பிறகு மதன் தான் திட்டமிட்ட படி வர்ஷாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மதன் பதுங்குவதற்கு வசதியாக அந்த பங்களாவில் செப்டம்பர் மாதம் வடமாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை கொண்டு இரவு, பகலாக உள் அலங்கார வேலை நடந்துள்ளது. அப்போது தான், மதன் பதுங்குவதற்கான ரகசிய இடத்தை தனது வீட்டில் வர்ஷா அமைத்து இருக்கலாம் என்று அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் திருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரத்துக்கு பாதுகாப்பாக செல்ல முடியாது என்பதால், மதன் ஒரு சொகுசுகாரை வாங்க திட்டமிட்டுள்ளார். தனது பெயரில் கார் வாங்கினால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவர் தனது தோழி வர்ஷா பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.18 லட்சம் மதிப்பிலான சொகுசுகார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரும் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி வர்ஷா பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் வர்ஷாவும், மதனும் கோவை, கோவா போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த பங்களாவில் மதன் தங்கி இருந்த நேரத்தில், திருப்பூரில் இருந்து அவர் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர், பாபநாசம் போன்ற சில திரைப்படங்களை பார்த்து, சென்னையில் இருந்து வெளிமாநிலங்களில் எங்கெங்கு செல்வது? எவ்வாறு செல்வது? எங்கு தங்குவது? பின்னர் அங்கிருந்து எங்கு செல்வது? என்பது போன்று முன்பே திட்டமிட்டு இருக்கிறார்.
திருப்பூரில் தங்கி இருந்த மதன், வர்ஷாவின் வீட்டில் இருந்த நோட்டில், எங்கு செல்வது? எங்கு தங்குவது போன்ற தனது திட்டத்தை எழுதி இருந்ததாக தெரிகிறது. அந்த குறிப்பில் ஒவ்வொரு ஊருக்கு கீழும் அம்புக்குறி போட்டு குறித்துள்ளார். அதுபோல் திருப்பூர் என்று எழுதப்பட்டு இருந்ததற்கு கீழும் அம்புக்குறி போட்டுள்ளார்.
இந்தநிலையில் மதன் திருப்பூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வரவே அவர்கள் கடந்த வார இறுதியில் திருப்பூருக்கு வந்து விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். போலீசார் வந்ததை அறிந்த மதன், தான் எழுதி வைத்து இருந்த குறிப்புகள், தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்ததற்கான ஆவணங்களை கிழித்து போட்டுள்ளார். மேலும் தனது செல்போன் எண்களை போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க அவர் ஏராளமான சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார்.
அந்த சிம்கார்டுகளின் கவர்களையும் அவர் குப்பையில் போட்டுள்ளார். பின்னர் அந்த குப்பைகளை வீட்டுக்கு பின்பகுதியில் செல்லும் நல்லாற்றங்கரையோரம் போட்டு, அவற்றுக்கு தீவைத்து எரித்துள்ளார். ஆனால் அவற்றில் சில குறிப்புகள் எழுதி இருந்த தாள்களும், சிம்கார்டு கவர்களும் முழுவதும் எரியாமல் கிடந்தன.
அத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர வில்லாவில் வழங்கப்பட்ட குளியல் பொருட்களின் அட்டை பெட்டிகளும், சிகரெட் பெட்டிகளும் குப்பையில் எரியாமல் கிடந்தன. இதனால் மதன், திருப்பூரில் இருந்து தனது தோழியுடன் கோவா மற்றும் கேரள மாநிலத்துக்கு சென்றுவந்து இருக்கலாம் என்றும், அங்கு ஓட்டலில் தங்காமல் தனி பங்களாவில் தங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குப்பையில் ஆவணங்கள் எரிந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே வர்ஷா வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியில் வருவதே இல்லை. வீட்டின் அழைப்பு மணியை அடித்தாலும் யாரும் வெளியே வரவில்லை. வீட்டின் வேலைகார பெண் மட்டும், வாசல் தெளித்து கோலம் போட்டு வேலைகளை கவனித்து வருகிறார். மேலும் மதனின் தோழி வர்ஷா தனது முகநூல்(பேஸ்புக்) கணக்கை அழித்து விட்டார். அதுபோல் வர்ஷாவின் துணிக்கடையும் திறக்கவில்லை.
Post your comment