நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை : மாதுரி தீட்சித் பேட்டி

Bookmark and Share

நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை  : மாதுரி தீட்சித் பேட்டி

‘இந்தி திரை உலகின் நாட்டியத் தாரகை’ என்று புகழப்படுகிறவர், மாதுரி தீட்சித். இவரது நடனத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்தி திரையுலகில் இவரது இடத்தை நிரப்ப புது நடிகைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்த இவர், திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு முழுக்குபோட்டார். இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். விளம்பர படங்களிலும் நடிக்கிறார். தொலைக் காட்சி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செயல்படுகிறார்.

அவரிடம் சில கேள்விகள்:

எப்போதிலிருந்து உங்களுக்கு நாட்டியத்தில் ஈடுபாடு வந்தது?

மூன்று வயதிலிருந்து நாட்டியம் கற்றுக்கொண்டேன். கதக் நடனம் எனக்கு அத்துப்படி. நிறைய மேடைகளில் ஆடினேன். பலரது நடனங்களை பார்த்தேன். அதில் வித்தியாசமான அசைவுகளை தேர்ந்தெடுத்து, பயிற்சி செய்து நிபுணத்துவம் பெற்றேன்.

நாட்டிய அழகியான நீங்கள், சினிமா கதாநாயகி ஆவோம் என்று நினைத்தீர்களா?

நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை. திறமைகளை நாம் வளர்த்துக்கொண்டால் வாய்ப்புகள் தானே தேடிவரும். நான் சினிமாவில் நடன அமைப்பாளர் சொல்லிக்கொடுத்த நாட்டியத்தைவிட, எனக்கு தெரிந்த நாட்டியத்தைதான் ஆடினேன். அதுவே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தொடர்ந்து நான் நடித்த எல்லா படங்களிலும் எனது நடனத்திற்காக ஒரு பாடல் காட்சி சேர்க்கப்பட்டது. அது என் நாட்டியத்திற்கு கிடைத்த மாபெரும் மரியாதை.

தொலைக்காட்சி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்படுகிறீர்கள். நாட்டிய போட்டி நிகழ்ச்சிகளால் சமூகத்திற்கு என்ன பலன்?

நடனம் கற்றவர்களுடைய திறமையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. அறிமுகமும் கிடைக்கிறது. அறிமுகம் கிடைத்தாலே வெளிவாய்ப்புகள் தேடிவரத் தொடங்கிவிடும். மேலும் நாட்டியத் தவறுகளை திருத்திக்கொள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் உதவும். போட்டிக்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சி அவர்களை திறமைசாலிகளாக மாற்றும். நாட்டியத்தை தொழிலாக நடத்த விரும்புவோருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாட்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

தரமான நாட்டிய நிகழ்ச்சிகளை ரசிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நடுவராக இருப்பதில் சிறந்த அனுபவம் கிடைக்கிறது. உற்சாகமான நாட்டியத்தை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்பியதைப் போல இருக்கும். என் காலத்தில் இப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லையே என்று நினைத்துக் கொள்வேன்.

இப்போதும் தினமும் நாட்டிய பயிற்சி மேற்கொள்கிறீர்களா?

ஆமாம். தினமும் இரண்டு மணிநேரம் பயிற்சி செய்கிறேன். நாட்டிய பயிற்சி என்பது நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. சில நாட்கள் நேரம் போவதே தெரியாமல் ஆடிக்கொண்டிருப்பேன். மனதிற்கு பிடித்த விஷயங்களுக்கு நேர கட்டுப்பாடு எதுவும் கிடையாது. உடலின் எல்லா பாகங்களுக்கும் பயிற்சியளிப்பது நாட்டியம் மட்டுமே.

நாட்டியத்தால் உங்களுக்கு கிடைக்கும் பலன்?

மனதிற்கு அமைதி கிடைக்கிறது. எல்லோரும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஏதாவதொரு வழியைத் தேடுகிறார்கள். நான் நாட்டியத்தை தேர்வு செய்துவிட்டேன். இதனால் என் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது. எனக்கு ‘ஜிம்’மிற்கு போக வேண்டிய அவசியமில்லை. பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கிறது. பாடுகிறார்கள்.. வரைகிறார்கள்..! ஓடுகிறார்கள்..! சிலர் யோசனையே இல்லாமல் நிறைய சாப்பிடுகிறார்கள்.

நாட்டியத்தில் சிறந்து விளங்க என்ன தகுதிகள் தேவை?

நல்ல பயிற்சியும், ஆர்வமும் தேவை. சிறந்த குருக்கள் நல்ல முறையில் தவறுகளை திருத்தி பயிற்சியளிப்பார்கள். கடுமையான பயிற்சிகள் மூலம்தான் நமக்கு தேவையான தகுதிகள் கிடைக்கும். நாட்டியத்திற்கு ஏற்ற ஆரோக்கியமும், உடல்வாகுவும் தேவை. பல மணி நேரம் ஆட உடலில் சக்தி தேவை. அதற்கேற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் கலைத்திறனை வெளிப்படுத்த குடும்பத்தினர் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கிறது?

குடும்பத்தினர் ஆதரவு இருந்தால்தான் நம்மால் பிரகாசிக்க முடியும். திருமணம், குழந்தைகள், குடும்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். ஆனால் அதோடு நம் வாழ்க்கை நின்று விடுவதில்லை. அதையும் தாண்டி எல்லோருக்கும் ஒரு கனவு உண்டு. அந்த கனவு நிஜமாக குடும்பத்தார் உதவி தேவை. எனக்கு கிடைக்கிறது. அதனால் என்னால் ஜொலிக்க முடிகிறது.

இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வளர்ச்சியை பற்றி உங்கள் கருத்து என்ன?

பெண்களின் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சி. ஆனால் இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது. அது நம் வளர்ச்சியை பாதிக்கும் விஷயம். வெளிநாடுகளில் பெண்களின் திறமைக்கு மதிப்பளிப்பதோடு பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் உண்டு. நம் நாட்டில் பெண்கள் பயந்து பயந்து அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. பெண்கள் தன்னைவிட வளர்ந்துவிடக்கூடாது என்பதில் ஆண்கள் கவனமாக இருக்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.

மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி?

பேராசை மகிழ்ச்சியை அழித்துவிடும். இயல்பான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சக்தி நம்மிடம் உள்ளது. ஆசை குறைய குறைய மகிழ்ச்சி அதிகரிக்கும்.


Post your comment

Related News
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
பிரபு தேவாவுடன் நடனம் ஆட பயப்படும் மாதுரி தீக்‌ஷிட்!
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!
தொடரும் ஸ்ரீதேவி - மாதுரி தீட்சித் மோதல்!
நாக சைதன்யாவுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட மாதுரிமா
சன்னி லியோனுடன் மோதும் \"ஆம்பள\" மதுரிமா!
தமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா
வடிவேலுவின் செண்டிமென்டை உடைத்த மீனாட்சி தீட்ஷித்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions