அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை

Bookmark and Share

அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை

விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தீபாவளி தினத்தில் ‘ரிலீஸ்’ ஆகி இருக்கிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படம், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம். விஜய் 3 வேடங்களில் நடித்திருக்கிறார்.

தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தடை இல்லை என்று கோர்ட்டு அறிவித்தது.

ஆனால் தீபாவளிக்கு 2 நாள் இருந்த நிலையில் படத்தில் விலங்குகள் இடம் பெற்றுள்ளது. எனவே விலங்குகள் நல வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்ற சிக்கலான நிலை ஏற்பட்டது.

இதனால் விஜய், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதன்பிறகு விலங்குகள் நல வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்தது.

தணிக்கை அதிகாரிகள், படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றனர். இதனால் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்று இருந்த புறா, பாம்பு வருவது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டன.

அதன்பிறகு ‘மெர்சல்’ படத்துக்கு ‘யு.ஏ.’ சான்றிதழ் கொடுத்தனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

விஜய் படம் திரையிடும் தியேட்டர்களில் கொடி, தோரணம், விஜய் கட்-அவுட் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். நேற்று ‘மெர்சல்’ வெளியானதை ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மெர்சல் படத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது. எனவே அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு இலவச மருத்துவம் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை வற்புறுத்தும் விஜய், “7 சதவீத

ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குகிறது. ஆனால் நமது நாட்டில் 28 சதவீத ஜி.எஸ்.டி.

வசூலிக்கப்பட்டும் மருத்துவ வசதி செய்யப்படவில்லை. ஆனால் மக்களை சீரழிக்கும் மதுவுக்கு வரி இல்லை. இதற்கு காரணம் யார்?” என்று சாடுகிறார்.

அரசியல் குறித்து விஜய் பேசும்போது, “ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஆகிறது. ஒரு பட்டதாரி உருவாக 3 ஆண்டுகளும், டாக்டர், வக்கீல், என்ஜினீயரிங் படிக்க 4, 5 ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் ஒரு நல்ல அரசியல் தலைவன் உருவாக ஒரு யுகம் தேவை” என்று குறிப்பிடுகிறார்.

மத்திய அரசை பற்றி விஜய் வசனம் பேசுகிறார். எனவே மாநில அரசியல் தொடர்பான வசனங்கள் நீக்கப்பட்டிருக்கலாம்” என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகி இருப்பதால் ‘மெர்சல்’ படத்துக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

மெர்சல் படம் தமிழ்நாட்டில் 400 முதல் 500 தியேட்டர்கள் வரை ‘ரிலீஸ்’ ஆகலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இது 700-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அனைத்திலும் ‘மெர்சல்’ படம்தான் திரையிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 3500 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 4500-க்கும் அதிகமான தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்பட்டுள்ளது. தீபாவளி படங்களில் ‘மெர்சல்’ அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions