நடிகரின் வீடுதேடிச் சென்ற முதல்வர்

Bookmark and Share

நடிகரின் வீடுதேடிச் சென்ற முதல்வர்

கேரள மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி நடிகர் மோகன்லாலின் வீடு தேடிச் சென்று அவரை சமாதானப்படுத்த முயன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் தொடக்கவிழாவில் மோகன்லால் லாலிசம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரவில்லை.

பாடகர்கள் சொந்தமாக பாடாமல் டேப் செய்து வைத்த பாடலுக்கு வாய் அசைத்தனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் விழாவில் நடிகரின் பெயரில் கலைநிகழ்ச்சி நடத்துவதா என்று திரையுலகில் உள்ள சிலரே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கலை நிகழ்ச்சிக்காக அரசு மோகன்லாலுக்கு ஒரு கோடியே அறுபத்து மூன்று லட்சங்கள் வழங்கியிருந்தது. 

சர்ச்சை பெரிதானதால் அந்தத் தொகையை ஒரே செக்காக அரசுக்கு திருப்பி அனுப்பினார் மோகன்லால். ஆனால், அரசு அதனை பெற்றுக் கொள்ளாது என உம்மன் சாண்டி அறிவித்தார். அப்படியும் தனது முடிவை மோகன்லால் மாற்றிக் கொள்ளவில்லை.

 இந்நிலையில் முதல்வர் உம்மன்சாண்டியும், விளையாட்டு மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும் கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டிற்கு நேரில் சென்றனர். அவர்கள் மோகன்லாலிடம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். 

ஆனால் சர்ச்சை ஏற்பட்டதால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக மோகன்லால் அவர்களிடம் தெரிவித்தார். சுமார் 15 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு உம்மன்சாண்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பு பற்றி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும்போது மோகன்லால் திரும்ப பெற மறுத்த தொகையை அவரது விருப்பப்படி நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தலாமா அல்லது முதல்–மந்திரியின் நிவாரண நிதியில் சேர்க்கலாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions