
ஷங்கரின் டைரக்சனிலேயே டெக்னிக்கலாக மிகவும் பிரமாண்டமான படம் என்றால் அது 'எந்திரன்' ஆகத்தான் இருக்க முடியும். ஆனால் அந்தப்படத்தின் கதையை உருவாக்கிவிட்டு அதை படமாக்கத்தான் பல ஆண்டுகள் காத்திருந்தார் ஷங்கர்.
காரணம் அந்த படத்தின் பட்ஜெட்.. அப்போதெல்லாம் அந்த அளவு பட்ஜெட்டிற்கு தமிழ் சினிமா தயாராகி இருக்கவில்லை.. இருந்தாலும் அந்தப்படத்தின் கதையை எழுத்தாளர் சுஜாதாவுடன் உட்கார்ந்து பட்டை தீட்டினார் ஷங்கர்.
கமலை வைத்து 'இந்தியன்' படத்தை கொடுத்த ஷங்கர், பிறகு ரோபோவிலும் அதாவது எந்திரனிலும் கமலை நடிக்க வைப்பதாகத்தான் அப்போது பரபரப்பான பேச்சாக இருந்தது.
அதன்பிறகு அந்த கதையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது ஷாருக்கானை வைத்து ஷங்கர் தனது முதல்வன் படத்தை 'நாயக்' காக ரீமேக் செய்த அந்த நட்பின் அடிப்படையில் அப்படி ஒரு செய்தி வெளியானது.. ஆனால் அதுவும் வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டது.
பின்னர் அஜித் நடிப்பதாக பேச்சு திசை மாறியது. ஆனாலும் மேற்கொண்டு காரியங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.. அதில் சூப்பர்ஸ்டார்தான் நடிக்கவேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி என்றால் அதை யார் மாற்ற முடியும்..? அப்படித்தான் எந்திரன் உருவானது.
ஆனால் இந்த கதையில் முதன்முதலாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலைத்தான் நடிக்கவைப்பதாக ஷங்கர் முடிவு செய்துவைத்திருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா.? ஆனால் அதுதான் உண்மை.
இது அவரே 'ஐ' பட ஷூட்டிங்கின்போது அதில் நடித்த சுரேஷ்கோபியிடம் பேச்சுவாக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்.. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை சுரேஷ்கோபி சொல்லிவைக்க, 'அடடா வட போச்சே' என்கிற ரீதியில் மோகன்லால் ரசிகர்கள் புலம்புகிறார்களாம்.
இனி வரும் காலத்தில் ஷங்கருடன் மோகன்லால் இணையும் வாய்ப்பு வருமா..? இல்லை அந்த காலகட்டம் எல்லாம் தாண்டி ஷங்கர் வந்துவிட்டாரா..? காலம் தான் பதில் சொல்லும்.
Post your comment