நா.முத்துக்குமாரின் 16 ஆண்டு கால தவம்!

Bookmark and Share

நா.முத்துக்குமாரின் 16 ஆண்டு கால தவம்!

கடந்த 12 ஆண்டுகளாக அதிகப் படங்கள் அதிகப் பாடல்கள் எழுதிய சாதனையைத் தக்க வைத்துக்கொண்டு வருகிறார் நா. முத்துக்குமார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி திடீர் நடிகர்கள் வரை பாடல் எழுதியிருக்கிறார்.  ஆனால் அவருக்கு ஒரு குறை இருந்திருக்கிறது.

கமல்ஹாசன் நடித்த படத்துக்கு மட்டும் பாடல் எழுதாமலேயே இரண்டாயிரம் பாடல்களையும் 16 ஆண்டு காலத்தையும் கடந்து இருக்கிறார். இதை பாபநாசம் படம் தீர்த்து வைத்துள்ளது.

இந்த நம்பமுடியாத தகவலை பாபநாசம் ஊடக சந்திப்பில் முத்துக்குமார் வெளியிட்டார்.

அந்த அனுபவம் பற்றி விவரிக்குமாறு கேட்ட போது " நான் எழுத வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. கமல் சார் படவாய்ப்புக்காகத் தவமிருந்தேன். அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. நான் சிறுவயதிலிருந்தே கமல் சாரின் பரம ரசிகன். அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவரது படங்களைப் பார்த்துசினிமா ரசனையை வளர்த்தவன் .

நான் சூப்பர்ஸ்டார் முதல் புதியநடிகர்கள் வரை பலரது படங்களுக்கும் பாடல்கள் எழுதிவிட்டேன். ஆனால் கமல் சாரின் படவாய்ப்பு மட்டும் அமையவே இல்லை. நான் பாடல் எழுதிய இயக்குநர்களுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. பாபநாசம் படவாய்ப்பு வந்த போது அவருக்கு பாட்டு எப்படி எழுதுவது பற்றிய பதற்றம் எனக்கு இருந்தது. கமல் ஒரு நடிகர், இயக்குநர், எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல நல்ல பாடலாசிரியரும் கூட. அவர் பல பாடல்களை எழுதியிருக்கிறார்.

அடிப்படையில் கவிஞானம் உள்ளவரிடம் நாம் எப்படி எழுதுவது ரொம்பவே மெனக்கெட வேண்டும் என்கிற பதற்றம் இருந்தது.

கமல் சாரை இதற்கு முன் ஏழெட்டு முறை சந்தித்துப் பேசியுள்ளேன். நான் எழுதிய புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் பாடல் எழுத ஒரு கவிஞர் முன்பே அமர்வது என்பது ஒரு சவால்தானே?

நான்தான் பதற்றமாக இருந்தேன். அவர் இயல்பாகப் பழகினார். என்னிடம் சகஜமாகப் பேசினார். அந்த பதற்றத்தைத் துடைத்தெறிந்து நட்பாகி விட்டார்..அதன் பிறகுதான் நான் ஆசுவாசமானேன்.கமல் சாரை சந்தித்துப் பேசும்போது  பாடல் சம்பந்தமாக  அதிகம் பேசவில்லை.ஆனால் அதற்கிடையில் உலக சினிமாபற்றி இலக்கியம் பற்றி நிறைய பேசுவார். உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை பேசினார். இந்த சந்திப்புகள் மூலம் அவரிடம் நான் கற்றதும் பெற்றதும் நிறையவே உண்டு .அவர் பார்த்த படம், படித்த புத்தகம், வாசித்த கவிதை என்று பேச ஆரம்பித்தாலே நேரம் போவதே தெரியாது. 

கமல் சாரை சந்தித்துப் பேசும்போது  பாடல் சம்பந்தமாக பத்து நிமிடங்கள்தான்  பேசியிருப்பார்.பல்வேறு தளங்களில் பேச்சு சென்றபின் கடைசியில்தான் படத்துக்கு வந்தார். படத்தில் திருநெல்வேலி மொழி பேசுகிறார்கள். அதற்கு ஏற்றபடி எழுத வேண்டும். சிரமமா என்றார். அதெல்லாம் சிரமமில்லை செய்து விடலாம்  என்றேன். நெல்லைமண் பாரதிமுதல் பல படைப்பாளிகளைத் தந்தமண். கல்யாண்ஜி, கலாப்ரியா, தி.க.சி, ஜெயமோகன், சுகா போன்ற எழுத்தாளர்கள் நெல்லைக்காரர்கள். அவர்களில் பலரும் என் நண்பர்கள்தான். அவர்கள் தவிர நெல்லைக்கார நண்பர்கள்  பலரிடம் எனக்குப் பழக்கமுண்டு.

எனவே அவர்களின் மொழி எனக்கு அறிமுகம் உண்டு. ஒரு பாடலுக்கு நாலைந்து பல்லவிகள் எழுதிக் கொடுத்தேன். எது நன்றாக இருக்கிறது?எதை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.நான் எனக்கு எல்லாம் பிடித்த மாதிரி உள்ளது  முடிவெடுக்க முடியவில்லை நீங்களே சொல்லுங்கள் என்றேன் அவர் ஜெயமோகன், சுகாவிடம் காட்டச் சொன்னார்.

ஏட்டி என் கோட்டிக்காரி என்று ஆண் பாடுவதாகவும் ஏலா என் கோட்டிக்காரா என்று பெண் பாடுவதாகவும் எழுதியிருந்தேன். பெண்கள் ஏலா என் கோட்டிக்காரா என்று கூற மாட்டார்கள் ஏலாஎன்பது மரியாதையில்லை. எய்யா  என்றுதான் கூறுவார்கள்  என்றார்கள்.பிறகு எய்யா என் கோட்டிக்காராஎன்று திருத்தினார்கள். இப்படி சிறுசிறு மொழி திருத்தங்களுடன் இரண்டு பாடல்களும் உருவாயின.

நான் பாபநாசம்படத்தில் எழுதியுள்ளது இரண்டே பாடல்கள்தான். நிறைய பாடல்கள் இல்லை என்பது வருத்தம்தான். படத்தில் இரண்டே பாடல்கள் என்பதுதான் எனக்குக் குறை. இன்னும் நிறைய இருந்திருந்தால் கமல்சாரிடம் நிறைய பேச முடிந்திருக்குமே என்று நினைத்தேன்." என்று கூறுகிறார். நா: முத்துக்குமார். 


Post your comment

Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions