நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது!

Bookmark and Share

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 18–ந்தேதி சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றினர். தலைவராக நடிகர் நாசர், பொது செயலாளராக விஷால், துணைத் தலைவர்களாக பொன் வண்ணன், கருணாஸ், பொருளாளராக கார்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

பாதுகாப்பு கருதி கூட்டம் நடைபெறும் இடம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு புதிய தலைவர் நாசர் தலைமையில் செயற்குழு கூடியது. இதில் பொது செயலாளர் விஷால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையால் தான் முன்னாள் தலைவர் சரத்குமார் அணியினருக்கும், பாண்டவர் அணிக்கும் மோதல் ஏற்பட்டு தேர்தல் நடைபெறும் நிலை உருவானது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி நிர்வகிக்கும் பொறுப்பை எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் எஸ்.பி.ஐ.யுடனான ஒப்பந்தம் செப்டம்பர் 26–ந்தேதியே ரத்து செய்யப்பட்டதாக தேர்தலுக்குப்பின் கடந்த 19–ந்தேதி சரத்குமார் அறிவித்தார்.

நடிகர் சங்கத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வது, மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி வழங்குவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன் பிறகு தீர்மான விவரங்களை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் வடபழனி ‘கிரீன் பார்க்’ ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளியிடுகிறார்கள். இதனால் வடபழனி ஓட்டலில் ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் குவிந்துள்ளனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions