ஒளிப்பதிவு உயிர், நடிப்பு உடல்: நட்ராஜ் சிறப்பு பேட்டி!

Bookmark and Share

ஒளிப்பதிவு உயிர், நடிப்பு உடல்: நட்ராஜ் சிறப்பு பேட்டி!

'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக்  களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச்சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார்.

அண்மையில் வந்துள்ள 'கதம் கதம்' படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். ஒளிப்பதிவில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிப் பயணிக்கும் நட்டி ,நடிப்பில் கெட்டது செய்தும் கைதட்டலை அள்ளி வருகிறார். மார்ச்மாதத்து ஒரு மாலைநேரத்து மயங்கிய ஒளியில் அவரைச் சந்தித்தபோது 

நீங்கள் ஓர் ஒளிப்பதிவாளராக ஆனது எப்படி? 

எனக்கு சொந்த ஊர் பரமக்குடி. நான் எட்டு வயதாக இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு குடும்பம் சென்னைக்கு வந்தது. நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு கேமரா மீது தணியாத ஆர்வம். எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் கேமரா வாங்கியிருந்தார். அதைத் தொடவேண்டும் பார்க்க என்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் அதைக் கொடுத்து எடுக்கச் சொன்னார். எனக்குத் தெரிந்த விதத்தில் எல்லாம் படங்கள் எடுத்து பிரிண்ட் போட்டு அவரிடமே காட்டினேன். இப்போதெல்லாம் டிஜிட்டல் வந்து விட்டது. அப்போதெல்லாம் ஒரு பிலிம் ரோல் வாங்க 56 ரூபாய் வேண்டும். பணம் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி கேமரா ஒளிப்பதிவு மோகத்தில் இருந்தேன். நிறைய்யய படங்கள் பார்ப்பேன். 

இப்படி இருந்த நான் முதலில் ரங்காவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். பிறகு பி.ஆர். விஜயலட்சுமியிடம் சேர்ந்தேன்.அவர்தான் என் பெயரை நட்டு என்றாக்கினார்.இந்திக்குப்போனதும் நட்டி ஆக்கிவிட்டார்கள்... அதன் பிறகு நண்பன் யூகே செந்தில்குமாருடன் இணைந்தேன். இப்படி படிப்படியாகத்தான் நான் ஒளிப்பதிவாளர் ஆனேன்.

இந்திப் பக்கம் போனது எப்படி?

வட இந்தியாவில் நம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒருவரிடம் திறமை இருக்கிறது என்றால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அதில் அவர்களுக்குத் தயக்கமே கிடையாது. எல்லா கிரிக்கெட்டர்களுடன்,நடிகர்களுடன் நிறைய விளம்பரப்படங்கள் ,மியூசிக் வீடியோஸ் செய்தேன். அதைப் பார்த்துவிட்டுத்தான் அங்கே அழைத்தார்கள்.அப்படிப் போன நான். 'லாஸ்ட் ட்ரெய்ன் டு மகாகாளி ',பாஞ்ச்', 'ப்ளாக் ப்ரைடே', பரிணிதா', ஜப்விமெட்', 'ராஞ்ச்சனா' என்று தொடர்ந்து' ஹாலிடே...' வரை 16 படங்கள் இந்தியில் செய்து விட்டேன் 8 கோடி பட்ஜெட்டிலிருந்து 80 கோடி வரை வேலைபார்த்து விட்டேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.அதன்மூலம் நிறையக்கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இந்தியில் மெதுவாகவே படம் எடுப்பார்கள் என்பார்களே..?

அதெல்லாம் அந்தக் காலம் இப்போது பாலிவுட் திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி விட்டது. பூஜை போடும் போதே வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டுத்தான் தொடங்குகிறார்கள். அதனால் எல்லாம் குறித்த நேரத்தில் நடக்கும்.

படங்கள் எடுப்பதில் நம்மவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?

அங்கே எல்லாம் கார்ப்பரேட் ஆகிவிட்டது. இங்கே கார்ப்பரேட் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இந்திப் படங்கள் பெரும்பாலும்கலகலப்பான எண்டர் டெய்னர்ஸ்தான். சீரியஸான முயற்சிகள் மிகக் குறைவு அவர்களின் வியாபார ஏரியா பெரியது எனவே பொழுதுபோக்கு தன்மையுடன்தான் படங்கள் இருக்கும் ஒரு ரிக்ஷாக்காரன், மெக்கானிக்கை எல்லாம் வைத்து அங்கு படங்கள் எடுக்க முடியாது. ஒரு 'காதல் 'மாதிரி ஒரு 'வழக்கு எண் மாதிரி' அங்கே கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது.

கலகலப்பான கலர்புல்லான குடும்பப் படங்கள்  வரவேற்கப்படும். அங்கே காதல் ஒரு பிரச்சினை இல்லை. விருப்பப்பட்டால் இருவேறு சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. எனவே சாதி சமூகம் சார்ந்த சிக்கல்கள் பெரிதாக இல்லை. நிச்சயமாக தமிழில் மாறுப்பட்ட சோதனை முயற்சியாக படைப்புகள் வருகின்றன. வரவேற்கவும் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவில் யதார்த்தமாக   பதிவுசெய்வது, எதையும்  அழகுணர்வோடு செய்வது  இவற்றில் எது உங்கள் பாணி?

இயல்பான ஒளியில் செய்வது அழகுணர்வோடு செய்வது யதார்த்தம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும் கதையும் திரைக்கதையும் எதைக் கேட்கிறதோ அதையே நான் செய்வேன். திரைக்கதையும் பட்ஜெட்டும் தான் எவ்வகை என்பதை முடிவு செய்யும் 

நடிப்பு என்பது உங்களுக்குள் இருந்த ரகசியக் கனவா?

நிச்சயமாக அந்த எண்ணம் எனக்குள் இருந்ததில்லை. ஒரு கேமராமேனாக விதம்விதமாக படங்களில் பணியாற்றி திறமை காட்டவே ஆசைப்பட்டேன். நான் உதவியாளனாக இருந்த போதே நடிக்க வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். நான் முதலில் நடித்தது 'நாளை' படம்.அதில் நடிக்க வேண்டிய நடிகர் கடைசி நேரத்தில் வராமல் போகவே வேறு வழி இல்லாமல்தான் நான் நடிக்க வேண்டி இருந்தது.

இப்படி நான் நடிகரானது ஒரு விபத்துதான் அப்புறம் 'சக்கரவியூகம்' நான் தயாரிப்பில் ஈடுபட்ட படம். அதில் நடித்தேன்.பிறகு'முத்துக்கு முத்தாக' 'மிளகா', 'சதுரங்கவேட்டை' 'இப்போது 'கதம்கதம்' வந்திருக்கிறது.

ஒரு நடிகராக உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டதா?

முதலில் நடிக்கும் போது தயக்கம், பதற்றம் இருந்தது உண்மைதான் அடுத்தடுத்த படங்களில் எனக்கு நானே மார்க் போட்டுக் கொள்வேன். இன்றும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றும்.
'

சதுரங்கவேட்டை' படம்தான் நடிகராக உங்களை நீண்ட தொலைவு கொண்டு சென்றது என்று கூறலாமா?

நிச்சயமாக 'சதுரங்கவேட்டை'.எனக்கு மிகப் பரந்த பரப்பிலான பார்வையாளர் களைத் தேடிக் கொடுத்தது. அந்த பாத்திரத்தை ரசித்து செய்தேன்.அந்தப் படத்துக்குப் பிறகு என்னைப் பார்க்கிறவர்களில் பலர் என்றால், 10 பேரில் 4 பேருக்கு இப்படி ஏமாந்த அனுபவம் இருக்கிறது.அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு இல்லை என்றால்கூட தங்கள் நண்பர்களுக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார்கள்.

ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை தருவீர்கள்?

நான் இப்போது 'புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். நடிக்க படங்கள் வந்த போது 'புலி'க்காகவே காத்திருந்தேன்.அதில் விஜய்யுடன் பணியாற்றியது மறக்க முடியாத து.அவர் தொழில்நுட்பக்கலைஞர்களை மதிக்கத்தெரிந்தவர். 'புலி 'நிச்சயம் ஒரு மாஸ் படமாக வரும்.ஒளிப்பதிவுக்கு இரண்டு இந்திப் படங்கள்  கையில் உள்ளன. நடிப்பைப் பொறுத்தவரை 'உத்தரவு மகாராஜா', 'குண்டு இட்லி கேர் ஆப் கும்பகோணம்' மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்க உள்ளேன். நடிக்கும் படங்களில் நான் வெறும் நடிகன் மட்டுமே.கேமரா பக்கம் கவனம் செலுத்தமாட்டேன். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை என்றால் எனக்கு சுய திருப்தியும் படைப்பு அனுபவமும் தருவது ஒளிப்பதிவு த் துறைதான் நடிகனாக நடித்தாலும்  எந்தக் காலத்திலும் அதைக் கைவிட மாட்டேன்.

நடிப்பில் யாரைப் போல வர ஆசை?

அப்படி எதுவும் இல்லை. போகப்போக கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பாத்திரமும் புதுவிதமாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு போரடிக்கக் கூடாது. மசாலா மணம் எப்போதும் புதிதாக இருக்க வேண்டும்.


Post your comment

Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
விஜய்க்கு அப்படி இருந்தால் பிடிக்காது? நடிகர் நட்டியின் உண்மை
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
ஒளிப்பதிவாளர் நட்ராஜ்வுடன் இணையும் ராய் லட்சுமி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions