
நேரம் படம் மூலம் அறிமுகமானபோது இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு இளம் ரசிகர்களின் இதயங்களை உடைத்து நொறுக்கினார் நஸ்ரியா.
அதன்பின் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர வேறு எந்த படங்களிலும் நஸ்ரியா புதிதாக நடிக்கவில்லை. அவரது கணவர் பஹத் பாசிலும் நஸ்ரியா நடிக்க விரும்பினால் நடிக்கலாம் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தார்.
கடந்த ஆகஸ்ட்-21ஆம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அதன்பின் குடும்ப வாழ்க்கை மற்றும் படிப்பு ஆகிய விஷயங்களில் நஸ்ரியா கவனம் செலுத்தியதால் நடிப்பு பக்கம் எட்டிப்பார்க்க கூட விரும்பவில்லை.
ஆனால் அதேசமயம் கணவர் பஹத் பாசிலுடன் சேர்ந்து, அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்வது மற்றும் ஸ்டார் பார்ட்டிகளில் கலந்துகொள்வது என பிசியாகவே இருந்தார்.
ஆனால் இப்போது கணவரின் ஒத்துழைப்புடன் மீண்டும் அரிதாரம் பூசப்போகிறார் நஸ்ரியா. அந்தவகையில் நஸ்ரியாவின் சூப்பர்ஹிட் படமான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை தயாரித்த இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கவுள்ள 'மணியறையில் ஜின்னு' என்கிற படத்தில் நஸ்ரியா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நஸ்ரியாவுக்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசிலே நடிப்பார் என தெரிகிறது. நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவது குறித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Post your comment