மூத்த நடிகை எஸ்.என்.லட்சுமியின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி:
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி கடந்த 19-ந் தேதி இரவு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தமும் அடைந்தேன்.
சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தன்னுடைய 13-வது வயதில் திரைப்படத் துறையில் காலடி எடுத்துவைத்த எஸ்.என்.லட்சுமி, எம்.ஜி.ஆர். உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு தாயாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக்கொண்டவர்.
நான் நடித்த திரைப்படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். பார்ப்பதற்கு எளிமையானவர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தமிழ்நாடு அரசின் "கலைமாமணி'', "கலைச்செல்வம்'' உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
சினிமா துறைக்கு பேரிழப்பு
1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 6,000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த எஸ்.என்.லட்சுமி, கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வந்தார். எஸ்.என்.லட்சுமியின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், நடிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும் பேரிழப்பாகும். நாடகத்துறையிலும், திரைப்படத் துறையிலும் இவர் ஆற்றிய பணி மகத்தானது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post your comment
| Related News | |
![]() |




